Aran Sei

ரஜினிகாந்த் திருமணமண்டபம் 250 சதுர அடிதானா? – மீண்டும் சர்ச்சை

டிகர் ரஜினிகாந்த் சென்னை மாநகராட்சிக்குச் செலுத்திய சொத்து வரிக்கான ரசீதில், அவரது ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டப்பட்ட இடம் 250 சதுர அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகரான ரஜினிகாந்த்க்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்னைக் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டுக் காலத்துக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் சொத்து வரி செலுத்தும் படி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதையடுத்து ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா ஊரடங்கு காலத்தில் செயல்படாத தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், திருமண மண்டபத்துக்குக் கடைசியாக பிப்ரவரி 14-ம் தேதி சொத்து வரி செலுத்தியதாகவும் கொரோனா ஊரடங்கு காலத்தில், மார்ச் 24-ம் தேதி முதல் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், மனுவில் 1919-ம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப் பிரிவு 105-ன் படி, 30 நாட்களுக்கு மேலாக வளாகம் காலியாக இருந்தால், வரி நிவாரணம் அளிக்க முடியும் என்ற சட்டப்பிரிவையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

நன்றி : raghavendramandapam.com

இந்த வழக்கு நேற்று முன்தினம் (அக்டோபர் 14-ம் தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் எச்சரித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் தரப்பு வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது.

இவ்வழக்கு பற்றி நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் ’அனுபவமே பாடம்’ என்று ட்வீட் செய்திருந்தார்.

“ராகவேந்திரா மண்டப சொத்து வரி..நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே பாடம்”

இதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பெயரில் சென்னை மாநகராட்சியில் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கான சொத்து வரி மற்றும் அபராத தொகையாக ரூ.9 ஆயிரத்து 386 உடன், ரூ.6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் காசோலை மூலம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், வரி கட்டிய ரசீதில் ‘பில்ட்அப் ஏரியா’, வெறும் 250 சதுர அடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது கட்டடம் கட்டப்பட்டது (தரை தளத்தில்) 250 சதுர அடி. மேலும் கட்டடம் கட்டப்பட்ட ஆண்டு 2018 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

ஜியான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்டும்போது 250 சதுர அடி.. இப்ப வளந்துச்சுங்க…” என்று பதிவிட்டுள்ளார்.

 

சூர்யா சேவியர் என்பவர் செய்த ட்வீட்டில், “சொத்துவரி பிரச்சனை முடிஞ்சிருச்சு. ஆனா புது பிரச்சனை கெளம்பிருக்கு. கல்யாண மண்டபம் அளவு 250 சதுர அடியாம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இளங்கவி என்பவர் செய்திருந்த ட்வீட்டில், “எனக்கே அதை கட்டிய என்ஜினீயர பார்க்கனும்போல இருக்கே” என்று கூறியுள்ளார்.

இது ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது. பலர் இது குறித்துக் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்