Aran Sei

ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

25 கால நீண்டப் போராட்டத்திற்குப் பின்பு, ஒரு வழியாக நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சி ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு குறித்து அறிவிக்கும் அறிவிப்பை அறிவிக்கும் நாள் குறித்து அறிவிப்பிற்கான அறிவிக்கும் நாள் …..(..)…. நேற்று முன் தினம் (டிசம்பர் 3) வந்தது.

அடுத்த மாதம் கட்சியைத் தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டார். ரசிகர்களும், அவரது ஆதரவாளர்களும் ‘கிருப கிருப கிருப..’ என்று பரலோகத்தில் பறந்துக்கொண்டிருக்கிறார்கள். தலை சுற்றுதல்களைத் தடுக்கும் விதமாக, கட்சியின் கொள்கைகள் குறித்து பேசாமல், நேராகத் தேர்தல் அறிக்கை என்ன என்ன இருக்கும் என்று, கேளம்பாக்கத்தில் உள்ள ராகவா லாரன்ஸ் திருமண மண்டபத்தில், எங்கள் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பட்டியலிட்டுள்ளோம்.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிப்பு – கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக ஓபிஎஸ் தகவல்

ரஜினி கட்சியின் தேர்தல் அறிக்கை

1. சில்லறை மாற்ற கஷ்டப்படும் மக்களுக்கு உதவியாக, பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில், ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்‘ என்ற திட்டத்தின் கிழ் இலவச சில்லறை மாற்று அறைகள் திறக்கப்படும்.

2. சொத்து வரி கட்ட சொல்லி, மண்டப உரிமையாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும், மாநகராட்சிகள், நகராட்சி போன்ற அமைப்புகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து உடனே நீக்கப்படும்.

3. பள்ளி கட்டடங்களுக்கான வாடகையைப் பள்ளி உரிமையாளர்களிடம் இருந்து பெறும், கொடிய முறை ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாகக் கட்டட உரிமையாளர்களே பள்ளி உரிமையாளர்களுக்கு GSTயுடன் கூடிய வாடகை கொடுக்கும் நூதன முறை அமலாக்கப்படும்.

டிகோடிங் ரஜினிகாந்த்: அரசியல் ஹீரோவா? வில்லனா? – மகிழ்நன் பாம

4. பொது தேர்வுகளிலும், செமஸ்டர் தேர்வுகளிலும் தோல்வியுறும், மாணவர்களை உற்சாகப்படுத்து விதமாக, ‘வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி. தோல்வியுற்றால் மக்களின் தோல்வி’ என்ற சிறப்பு மறுதேர்வு முறை கொண்டு வரப்படும். அத்திட்டத்தின் மூலம் ஒரு மாணவர், பள்ளிக்கு செல்லாமலும் புத்தகத்தைக் கையால் தொடாமலும், நேரடியாக தேர்வுக்கு வர முடியும்.

5. ‘எப்ப கல்யாணம்.. எப்ப கல்யாணம்’ என்று சொந்தபந்தங்களால், கேள்விகளுக்கு உள்ளாகும் 90s கிட்ஸ்களின் கண்ணிரைத் துடைத்தெறியும் விதமாக, ‘நடப்பது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்ற பெயரில் மேட்ரிமோனி வசதியுடன் கூடிய தனி நலவாரியம் அமைப்பப்படும்.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

6. புதிதாகக் கட்சி தொடங்கும் நடிகர்களிடம் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்கும் மனிதநேயமற்ற நபர்களை, புகார் அளிக்கப்பட்ட 1 நிமிடத்தில் கைது செய்யும் வகையில், ‘ஒரு நிமிஷம் என் தலையே சுத்திடுச்சு தடுப்பு சட்டம், 2020’ என்ற சட்டம் வாக்குபதிவுக்கு முன், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவையில் ஒப்புதல் பெறப்படும்.

7. விமான நிலைய வாசல்களில் நாட்டு நடப்புகள் குறித்து தலைவர்களிடம், கருத்துக் கேட்கும் அராஜக செயல்களில் ஈடுபடும் பத்திரிக்கையாளர்களுக்குத் தக்கப்பாடம் புகட்டும் விதமாக, ‘#சத்தியமா_விடக்கூடாது’ என்ற அவசர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களை விமான நிலையத்திற்குள் விடாமல்,  தங்கள் மைக்குகளோடு ஆழ்வார்பேட்டைக்கு நாடு கடத்தப்படுவர்.

விளக்கம் தருவாயோ வதந்தியே?

8. 50 வயதை கடந்த ஸ்டார் நடிகர்களுக்கு, அரசியல் கட்சி தொடங்குவதற்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகளை (பட்டயம் சான்றிதழ் – 30 ஆண்டு) வழங்க, மத்திய அரசு (100 சதவீதம்) மற்றும் மாநில அரசின் (0 சதவீதம்) நிதி பங்களிப்புகளுடன், ஏவிஎம் ஸ்டூடியோவில் பயிற்சி மய்யம் தொடங்கப்படும்.

9. அதில் முதல் இடம் பிடித்த நடிகரை ஊக்கப்படுத்தும் விதமாக, பாஜக-வில் இருந்து ஒரு நிர்வாகி, அந்த நடிகரின் கட்சிக்கு பரிசாக அளிக்கப்படுவார். மற்ற நடிகர்களுக்கு தாழ்வுமனப்பான்மை வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கும் ஒரு பாஜக நிர்வாகி பரிசாக அளிக்கப்படும்.

E-அடிமைகள் : டிக்டாக் ரஜினிகள்! – அதிஷா எழுதும் தொடர் (பகுதி 3)

10. நாட்டில் இருக்கும் சுடுகாடுகளை முற்றிலுமாக மூடும் வகையில், ஒரு டைம் மிஷின் கண்டுப்பிடிக்கப்பட்டு, கடந்த காலத்திற்கு போய், எல்லா விடுதலைப் போராட்டங்களும் நிறுத்தப்படும். அந்த போராட்ட வீரர்களை, அங்கேயே கைது செய்து, ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாலை ஆறு மணி வரை அடைத்து வைக்கப்படுவர். ‘மன்னிப்புக் கடிதம்’ எழுதிக்கொடுத்தால், 100 ரூபாய் பேட்டாவுடன் நாலு மணிக்கே விடுவிக்கப்படுவர்.

 

– அர்விந்த்ராஜ் ரமேஷ். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்