Aran Sei

புதுக்கோட்டை: தலித் மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, 10 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்கு மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வின் போது, அங்குள்ள தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதும், கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை தீண்டாமை வன்கொடுமை சம்பவம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின் உறுதி

இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில்தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

வெள்ளனூர் காவல் நிலையத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 36 மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதியப்பட்டது. மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

மேலும் அரசு பேராசிரியர்கள் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், முனைவர் ஆர்.ராஜேந்திரன், கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய சமூக நீதி கண்காணிப்புக்குழு சம்பவம் குறித்து அண்மையில் வேங்கைவயலில் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து ஆட்சியர் கவிதா ராமுவிடமும் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, எஸ்பி வந்திதா பாண்டேவிடம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது” – மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

தொடர்ந்து கடந்த ஜனவரி 14ஆம் தேதி, வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும், வேங்கைவயல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து சிபிசிஐடி இவ்வழக்கு விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான குழுவினர் வேங்கைவயல், இறையூர் பகுதிகளில் விசாரணையை தொடங்கினர். மேலும் மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர்த்தொட்டி, இறையூரில் உள்ள கோயில் ஆகிய பகுதிகளை சிபிசிஐடி போலீசார் பார்வையிட்டனர். அப்போது இதுவரை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரால் இவ்வழக்கு தொடர்பாக பராமரிக்கப்பட்டு வந்த விசாரணை அறிக்கைகள், 85 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள், அவர்களிடம் பெறப்பட்ட வீடியோ பதிவுகள் அனைத்தும் சிபிசிஐடி காவல்துறையினரிடம் புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி தலைமையிலான குழுவினர் ஒப்படைத்தனர்.

அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணைக்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 35 சிபிசிஐடி காவல்துறையினர் இன்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Bjp Government gives approval to Tamilnadu Tableau | Republic Day Parade 2023 | Deva’s Update 88

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்