மூன்று விவசாய சட்டங்களை நீக்க கோரி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
போராட்டத்திற்கு வலுசேர்த்திடவும், தமிழக விவசாயிகளின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் இன்று (ஜனவரி 6) காலை 10.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் விடுதி அருகில் தொடங்க உள்ளதாக ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், “இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி., மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனித நேயமக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.” என்று பங்கேற்கவுள்ள தமிழக கட்சிகளை பெ.சண்முகம் அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.
மாநில முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.