Aran Sei

தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஹரியானா அரசைப் பின்பற்றித் தமிழகத்திலும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் ” ஹரியானா அரசு தனியார் துறைகளில் 75 விழுக்காடு இடஒதுக்கீட்டை உள்ளூர் வாசிகளுக்கு உறுதி செய்யும் விதமாகச் சட்டம் இயற்றியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் தனியார் துறைகளில் 80 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்யவேண்டும்“ என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

“ஹரியானாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்கும் இச்சட்டம் வரவேற்கத்தக்கதும் போற்றத்தக்கதும் ஆகும் ” என்று அவர் கூறியுள்ளார்.

https://www.facebook.com/DrRamadoss/photos/a.445870728910552/1675642775933335/

 

”மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட அனைத்திலும் மாத ஊதியம் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் கொண்ட வேலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆந்திர மாநிலம் ஒரு சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து அதே போன்ற சட்டத்தை ஹரியானா அரசு நிறைவேற்றியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ் “இதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் தனியார் துறைகளில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய சட்டம் கொண்டுவர வேண்டுமென“ தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஹரியானா – தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு – உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க சட்டம்

 

”இந்தியா ஒற்றை நாடு என்ற உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், ‘‘எங்கள் மாநில வேலைகள்… எங்கள் மக்களின் உரிமை’’ என்பதை மற்ற மாநிலங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதில் பல மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. கர்நாடகம், மராட்டியம், குஜராத், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இச்சட்டத்தை நிறைவேற்றவுள்ளன. அதேபோல் தமிழகத்திலும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்”  என்றும் பாமக நிறுவனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

” தமிழ்நாட்டிலுள்ள தனியார் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டவருக்கு மட்டுமா அல்லது இந்தியாவின் அனைத்து மாநிலத்தவருக்குமானதா” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் “புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது எனவும் அதனால் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டுமே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவேற்ற முடியும்“ எனவும் கூறியுள்ளார்.

“தென்னிந்தியாவில் கேரளம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு மட்டும்தான் தனியார் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக தனியார் வேலைவாய்ப்புகளை மட்டும் அனைவருக்கும் திறந்து விட்டால், தமிழக இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலையில்லாமல் வறுமையில்தான் வாட வேண்டும்”  என்று ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதியான ஆட்கள் இல்லை என்று நிராகரிக்காமல் படித்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துப் பணியமர்த்த வேண்டும் என்றும் இதைக் காரணம் காட்டி பிற மாநிலத்தவரைப் பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற பிரிவை இதற்கான சட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் பலமுறை வலியுறுத்தியதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துவதாகவும் தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும். இதற்கான அவசர சட்டத்தைப் பிறப்பிக்க அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்