திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிப்பது என்ற தமிழக அரசின் முடிவு, , கொரோனா பரவலை மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் என்று தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் மீண்டும் எச்சரித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள், 50% இருக்கைகளுடன் செயல்பட்டுக் கொள்ளலாம் என்று கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி – வைரலாகிவரும் மருத்துவரின் உருக்கமான கடிதம்
இந்நிலையில், நடிகர் விஜய், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இரண்டு தினங்களுக்கு முன் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று அவர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை நடிகர் சிம்புவும் முன்வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் ரிலீஸ் – திரையரங்கு அதிபர்களுக்கு கை கொடுக்கும் விஜய்
கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, நேற்று (ஜனவரி 5) தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
#COVID19 risk multiplies with each risk factor – indoors, poor ventilation, more time spent, crowding, speaking/ shouting and lack of mask – cumulative effect means red zone – highest chance of spread of #COVID19 pic.twitter.com/6uxA1qSmBm
— Prabhdeep Kaur (@kprabhdeep) January 5, 2021
அதில்,“ உள்ளரங்கு, காற்றோட்டம் இல்லாமல் இருப்பது, அதிக நேரம் அந்த ஓரிடத்தில் இருப்பது, கூட்டமாக இருப்பது, கூச்சலிடுவது, பேசுவது, முகக்கவசம் இல்லாமல் இருப்பது போன்றவை, கொரோனா தொற்று நோய் பரவலை மிகவும் ஆபத்தான நிலைக்கே இட்டுச் செல்லும். இது கொரோனா பரவலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.” என்று அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் – அறிவியல் முறை பின்பற்றப்பட்டதா?
தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்த அன்றே, “மூடப்பட்ட அரங்கில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது, கொரோனா பரவலுக்கான சாத்தியங்களைக் கூட்டும். மக்கள் இதை தவிர்கவும்.” என்று பிரதீப் கவுர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.