Aran Sei

அரசியல் சாசன பதவியின் கண்ணியத்தை கெடுக்கும் தமிழக ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

அரசியல் சாசன பதவியின் கண்ணியத்தை கெடுக்கும் தமிழக ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாஜக ஆட்சியில் இந்தியாவின் இதர அரசியல் சாசன அமைப்புகளைப் போலவே ஆளுநர் பதவியும் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசன பதவியே தவிர, ஆளுங்கட்சியின் முகவர் பதவி அல்ல. ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால் தற்போது இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலே ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அந்த வகையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் கூட்டாட்சி முறைக்கு மாற்றமாக இருப்பதோடு மட்டுமின்றி, சனாதன ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளின் முகவராகவும், ஊதுகுழலாகவும் உள்ளது.

சமீபத்தில் சென்னை ஸ்ரீராம் சமாஜத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர்கள், நாடு ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், மக்கள் வரிப்பணத்தில் இயங்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் நடத்திய சனாதன தர்ம அறக்கட்டளை நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ராமர் கோயில் கட்டுவது சவாலாக இருந்தது என்றும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்துக்கள் அதிக துன்பங்களை அனுபவித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூட, அனைவரின் உள்ளத்திலும் ராமன் குடி கொண்டுள்ளார் என தெரிவித்தார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெற்ற, அரசியலமைப்புச் சட்டத்தையே கிஞ்சிற்றும் மதிக்காத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இப்படியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் நிகழ்ச்சி நிரல்கள் பெரும்பாலும் சானாதன ஆர்.எஸ்.எஸ்.. இந்துத்துவ தொடர்புடையதாகவே உள்ளது.

ஆளுநர்கள் என்பவர்கள் அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டியவர்கள். அதற்காகத் தான் அவர்களுக்கான அலுவலகமாக ஆளுநர் மாளிகை உள்ளது. அதற்கான செலவுகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் சூழலில், சனாதன தர்ம அறக்கட்டளை நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகையில் எவ்வாறு நடத்தலாம் என்கிற கேள்வி எழுகிறது? எனில், பிற நிகழ்வுகளுக்கும் ஆளுநர் மாளிகையில் நடத்த அனுமதி அளிக்கப்படுமா? ஆளுநர் அதற்கு அனுமதி வழங்குவாரா? என்பதை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

ஒரு குடிமகன் என்ற நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எந்த விசயத்திலும் தனது கருத்துக்களை தெரிவிக்கவும், அவர் விரும்பும் யாரையும் மகிழ்விக்கவும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அரசியல், மத, சாதி, மொழி, பாலின ரீதியான பாரபட்சமற்ற நிலையை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அரசியல் சாசன பதவியை வகிக்கிறேன் என்பதையும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதே தனது விசுவாசமும், உறுதிப்பாடும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் மறந்து விட்டார்.

ஆகவே, ஆளுநர் என்ற மகத்தான பதவியை ஆர்.எஸ்.எஸ்ஸின் முகவராக தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தை கெடுப்பதை விட, தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனது ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்ததாக இருக்கும்.

ஆகவே, அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும், ஆளுநர் பதவிக்கும், அதன் செயல்பாடுகளுக்கும் ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் இத்தகைய செயல்பாடுகளை ஜனநாயக சக்திகள் கண்டிக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்