Aran Sei

பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் 

திருச்சி அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி, செருப்பு மாலை அணிவித்த நபர்களை கைது செய்யக்கோரி பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 111 வீடுகள் கொண்ட இச்சமத்துவபுரத்தின் நுழைவுவாயிலை ஒட்டி பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் செப் 27-ம் தேதி அதிகாலையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டும், காவி சாயம் ஊற்றப்பட்டும் இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து காவி சாயம் ஊற்றிய குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என திக, திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

“பெரியாரை அவமதிக்கும் விதமாக இரவோடு இரவாக இச்செயலை மேற்கொண்டுள்ளனர். இது போன்ற செயல்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரே செருப்பு மாலையை அகற்றி விட்டு, காவி சாயத்தை சுத்தப்படுத்தி விட்டனர். பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானவர்களான இந்துத்துவர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பர்.

இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் விரைவில் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும் மறியலும் நடத்தப்படும்” என்கிறார் திராவிடர் கழகத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியதாஸ்.

திமுக முதன்மைச் செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான கே.என்.நேரு இச்சம்பவத்தைத் தொடர்ந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

“தேர்தல் வருவதையொட்டி அவர்கள் (பாஜக) தாங்கள் வெற்றி பெறுவோம் என்கிற எண்ணத்தில் இது போன்ற தவறுகளைச் செய்கின்றனர். பெரியாரை இழிவுபடுத்தினால் அது அவர்களுக்குதான் சிறுமை. தங்கள் கட்சியை வளர்ப்பதாக எண்ணி திராவிட இயக்க தலைவர்கள் மீது பொய்யான பிரச்சாரம் செய்து, பெரியார் சிலையை சேதப்படுத்துவதன் மூலம் எங்களுக்குதான் பலம் சேர்க்கிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது தலைவரை (பெரியார்) தொட்டு பார்க்கட்டும்” என்று கூறினார் கே.என்.நேரு.

பெரியார் சிலையை அவமதித்தவர்களைக் கண்டறிவதற்காக காவல் துறையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்