Aran Sei

பெரியாருக்கு மாலையிட்டதால் இடமாற்றம்? – ‘நிர்கதியாய் நிற்பதாக’ காவலர் வருத்தம்

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால், மூன்று காவலர்கள் கடலூரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தலைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று காவலர்களும் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அதற்காக அவர்கள் மூவரையும் பழிவாங்கும் நோக்கோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

“பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கும் காவி உடை அணிவித்தும், காவி சாயத்தை ஊற்றியும் அவமரியாதை செய்பவர்களைக் கைது செய்ய- தண்டிக்க முன்வராத தமிழக அரசு, இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூவரையும் தண்டித்திருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது அதிமுக ஆட்சியா அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியா என்கிற சந்தேகத்தை இது எழுப்புகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட காவலர்கள் மூவரும் தங்கள் பணி நேரத்திலோ சீருடையிலோ இதைச் செய்யவில்லை. அவர்கள் செய்தது எந்த விதத்திலும் சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காத்தவரும், சமூக நீதிக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது குற்றம் என்று தமிழக அரசு கருதுகிறதா? இதைத் தமிழக முதல்வர் தெளிவுபடுத்தவேண்டும்” என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

“மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்களுள் இருவர் எஸ்.சி பிரிவையும் , ஒருவர் எம்.பி.சி பிரிவையும் சேர்ந்தவர்கள். மூவருமே சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் மூவரும் எந்தவொரு புகாருக்கும் ஆளாகாதவர்கள். அப்படியானவர்களை இடமாற்றல் செய்து தண்டிப்பது ஏற்புடையதல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.

“பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் மூவரையும் மீண்டும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டுமெனவும் தங்களின் ஆட்சி பெரியார் வழிவந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோரின் பெயரில் இயங்கும் ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் விசிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மூன்று காவலர்கள் பணியிட மாற்றத்தை கண்டித்து கடலூர் பெரியார் சிலை அருகே திராவிடர் கழகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான காவலர் ரங்கராஜனிடம் அரண்செய் பேசிய போது “இந்த இடமாற்றம் குறித்து எங்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே நிர்வாக ரீதியான இடமாற்றம் என்று மட்டும் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது என்ன செய்வது என்று எங்கள் மூவருக்கு தெரியவில்லை. நிற்கதியாக நிற்கிறோம். முன்று பேருக்கும் குடும்பம் உள்ளது. இந்த நேரத்தில் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை நினைத்து தவிப்பில் இருக்கிறோம்.” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்