Aran Sei

மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் – அற்புதம் அம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தின்  அங்கமாய் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான குரல்கள் ஒலிக்கின்றன. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மக்கள் எல்லோரும் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ‘ என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம் ‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

கையெழுத்து இயக்கம் , போராட்டம் , உண்ணாவிரதம், மனித சங்கிலி  உள்ளிட்ட போராட்டத்தின் பல வழிமுறைகளை, எழுவரின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் செய்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு எழுவர் விடுதலையை வலியுறுத்தி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடி தற்கொலை செய்து கொண்டார். தமிழக அரசியலின் மையமாக எழுவர் விடுதலை இருந்து வருகிறது.

இந்தச் சூழலில் ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் விடுதலைப்பாடல்  வெளியிடபட்டிருக்கிறது. “தாய் மனம் ஏங்குது விடுதலை வேண்டுது தாமதம் சரிதானா”  எனத் தொடங்கும் இந்தப்பாடலை தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பாரதிராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், அமீர், ரோகிணி, விஜய் ஆண்டனி,  சத்யராஜ், ராம் , பா.இரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ், ராஜுமுருகன், மாரி செல்வராஜ், நவீன், பொன்வண்ணன் ஆகியோர் வெளியிட்டிருக்கிகிறார்கள்.

விஜய் மானசா பாடலை எழுத  ஸ்ரீராம் ஆனந்தி மற்றும் தமிழினி பாடலைப் பாடி இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் பேசிய பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் ” மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருப்பதாக ” கூறியுள்ளார் .

திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ” ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 17 எதிரிகளின் தடா ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அன்றைய ஐபிஎஸ் திரு தியாகராஜன் எஸ்பி (தற்போது ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குனர்) 2013-ல் ஊடகங்களில் பேரறிவாளன் வாக்குமூலத்தை முழுவதும் பதிவு செய்யவில்லை எனவும் அறிவு நிரபராதி எனவும் ஊடகங்களில் பேட்டி அளித்தார்  “ என்று கூறியுள்ளார்.

மேலும், 2017-ல் தான் செய்த பிழையால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது எனச்சொல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரபலமான மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வு இது. ஆனால் இன்னும் அந்த நிரபராதிக்கு நீதி கிடைக்கவில்லை.” என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராஜன் கூறியதை நினைவுபடுத்தி  ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ஃபேஸ் புக் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்