பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ”முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாகச் சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும், நளினி, .ஸ்ரீகரன் என்கிற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை, தங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எழுவர் விடுதலை : `ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது’ – கமல்ஹாசன்
”மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது” என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
”அமைச்சரவை பரிந்துரைத்த போதும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்” என அவர் கூறியுள்ளார்.
”அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ள வழக்கமான நடைமுறை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்தப் பதவியில் இருப்போருக்கு உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது” என்பதை ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார்.
‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்
மேலும் “பன்னோக்கு விசாரணை முகமை மேற்கொண்டு வரும் விசாரணையில் மனுதாரர் (திரு. பேரறிவாளன்) குறித்து விசாரிக்கவில்லை என்றும் மனுதாரரால் கோரப்பட்டுள்ள விடுதலையானது மனுதாரருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்கும் இடைப்பட்ட விவகாரம் என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.
“இந்த விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று திட்டவட்டமாகத் சிபிஐ தெரிவித்துள்ளதை ஸ்டாலின் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
”சிபிஐ தாக்கல் செய்துள்ள மேற்காணும் பதில் மனுவின்படி, மாநில அமைச்சரவை சட்டப்பிரிவு 163-இன் படி தங்களுக்குச் செய்துள்ள பரிந்துரையை ஏற்க மாண்புமிகு ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், இது இரண்டு ஆண்டுகளாக தங்களது அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதென்பது மாநில நிர்வாகத்தைக் குறைத்துக் காண்பிப்பதோடு, மாநில அரசு சட்டத்தின்பாற்பட்டு நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது” என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் – அற்புதம் அம்மாள்
”எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள், 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியிட்ட, மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை இப்போதாவது ஏற்று, திருமதி. நளினி, திரு. ஸ்ரீகரன் என்கிற முருகன், திரு. சாந்தன், திரு. பேரறிவாளன், திரு. ஜெயக்குமார், திரு. ராபர்ட் பயஸ் மற்றும் திரு. பி. ரவிச்சந்திரன் ஆகிய தண்டனை பெற்றுள்ள ஏழுபேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து, அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தவைவர் ஸ்டாலின் ”ஏறக்குறைய 29 ஆண்டுகளாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தன்னந்தனியாக நின்று போராடி வருகிறார் அதையெல்லாம் ஆளுநரிடம் எடுத்து சொல்லியிருக்கிறோம். ஆளுநர் முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.