Aran Sei

பாளையங்கோட்டை: இந்து முன்னணி போராட்டத்தால் 27 வீடுகள் இடிப்பு

Demolishing Houses

பாளையங்கோட்டையில் சிவன் கோவிலைச் சுற்றி அமைந்திருந்த வீடுகளை ஒரே நாளில் நெல்லை மாநகராட்சி  இடித்து அகற்றியது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திரிபுராந்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் அருகில் அம்பிகாபதி தெரு மற்றும் எம்பெருமான் தெரு குடியிருப்புப் பகுதிகளில் 27 வீடுகள் இருந்தன.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, வீடுகளை உடனே காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

குடியிருப்பைச் சேர்ந்த சிலர் வெளியேற மறுத்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று நிலம் வழங்குவதாக உறுதியளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

செப்டம்பர் 15-ம் தேதி, மாநகராட்சி ஆணையரின் உத்தரவுபடி வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் ஸ்ரீராம் அரண் செய்-யிடம் பேசியபோது, “2011-ம் ஆண்டிலிருந்தே இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குடியிருப்புப் பகுதியை அப்புறப்படுத்த பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.” என்றார்.

“கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள், பூ கட்டி விற்பது மற்றும் சாலையோரங்களில் சின்ன வியாபாரம் செய்வது என வாழ்வாதாரத்துக்கு கோவிலை நம்பியே இருந்து வருகிறார்கள்.” என்று கூறினார்.

”மாற்று மனை பட்டா வழங்குவது குறித்து தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும், மாநகராட்சி அதற்கான எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. வீடுகளை இடித்த பிறகு ஊருக்கு வெளியே 15 கி.மீ தொலைவில் மாற்று மனை கொடுத்து என்ன பயன் இருந்துவிடப் போகிறது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர், “நகரின் மையத்தில் உள்ள இடம் என்பதால் குடியிருப்பை அப்புறப்படுத்திவிட்டு, வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடுவதே கோவில் நிர்வாகத்தின் திட்டம். இதற்கு மாநகராட்சி துணை போவது முறையல்ல. அரசியல் தலையீடு இல்லாமல் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.”

”மாநகராட்சி ஆணையர் நினைத்திருந்தால் வீடுகளை இடிப்பதையாவது தடுத்திருக்கலாம். கொரோனா சூழலில், இருக்க இடமின்றி வாடகைக்கு வீடு தேடி குடியிருப்பு வாசிகள் துன்பப்படுகிறார்கள்.” என ஸ்ரீராம் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்