Aran Sei

`பொது எதிரியை வீழ்த்திட, எதிர்ப்பு வாக்குகளைச் சிதறவிடக் கூடாது’ – கி.வீரமணி

பொது எதிரியை வீழ்த்தும்போது எதிர்ப்பு வாக்குகளைச் சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் உழைப்பு மட்டும் போதாது வியூகங்களும் தேவை என்றும் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அறிக்கை விடுத்துள்ளார்.

பீகார் தேர்தல் முடிவுகள் வழக்கமான கால நேரத்தைவிட அதிகமான அளவு நேரத்தை எடுத்துக்கொண்டு வெளியாகின. கொரோனா தொற்று பரவிடும் என்கிற அச்சத்தில் எச்சரிக்கையாகக் கூடுதலாக 60 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பெற்றும் வாக்கு எண்ணிக்கை மிகவும் மெதுவாக நடைபெற்றது என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டன.

மகாபந்தன் கூட்டணிக்கு முக்கிய தலைமை தாங்கும் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களைப் பெற்றுள்ளது. பாஜக 74 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது இழுபறி நீடித்த நிலையில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது என்று அறிவிப்பு வந்தபோது ஆளுங்கட்சியினர் மீது பல்வேறு புகார்கள் எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்டன.

பீகார் தேர்தல்: ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு’ – இடதுசாரிகள் புகார்

 

அதிக வெற்றிபெற்ற தேஜஸ்வி யாதவ்வை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருந்தார் .

பீகார் தேர்தல் – ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

பல்வேறு கேள்விகளை எதிர்கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர இருக்கிறது. இன்று பீகார் தேர்தல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தத் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக சக்திகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதில் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் ”31 வயதுள்ள பீகாரின் நம்பிக்கை நட்சத்திரமாகியுள்ள இளைஞர் தேஜஸ்வி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வளரும் தலைவராகி, இந்தத் தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாக உழைத்தார். அவருடைய உழைப்பும், கணிப்பும் தவறவில்லை. பா.ஜ.க. – அய்க்கிய ஜனதா தளம் பெற்ற வெற்றி, தோல்விக்கு சமமான வெற்றி (Pyrrhic Victory) என்ற அளவில், தேஜஸ்வியின் உழைப்பும், அவருக்கு பீகார் அடித்தள மக்கள் தந்த ஆதரவும் உள்ளன“ என்று கூறியுள்ளார்.

பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் கற்பிக்கும் பாடங்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், பொது எதிரியை வீழ்த்தும்போது – எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; உழைப்பு மட்டும் போதாது; வியூகங்களும் தேவை என்று  கூறியுள்ளார்.

காங்கிரஸின் தோல்வியில் இருந்து மற்ற மாநிலங்கள் பாடம் கற்க வேண்டும் என்று கூறிய அவர், “அதிக இடங்களைக் கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெறுவதைவிட, வெற்றி வாய்ப்பும் – அதைவிட முக்கியம் அரசியல் எதிரியைத் தோற்கடிக்கவேண்டும் என்ற திடமான உறுதியையும் முன்னிறுத்தியே தங்கள் கட்சிக்குரிய இடங்களைக் கேட்டுப் பெற்றால், அனைவரது வெற்றியும் அனைவருக்கும் கிட்டும் – அரசியல் எதிரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் – இலக்குகளை அடைய முடியும் என்ற பாடம், பீகார் தேர்தல்மூலம் இனி தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிரிணிகள் கடைபிடிப்பது நல்லது ” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“பொது எதிரியைக் குறி வைக்காமல் தங்களைத் தங்கள் கட்சியை மட்டும் பிரதானப்படுத்திக் கொண்ட, கூட்டணிகளின் வெற்றி பல நேரங்களில் ‘சிதறு தேங்காயாகி’விடக் கூடிய பேராபத்து உண்டு.” என்றும் எச்சரித்துள்ளார்.

“உழைப்பு மட்டும் போதாது; போதிய வியூகமும், வினைத் திட்பமும் தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியம்; குறிப்பாக, கருத்துக் கணிப்பு என்ற ‘மாயமான்’ வேட்டையாலும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிறகு ஏமாந்து கைபிசைகிறவர்களாகி விடக் கூடாது என்பதும் புரிய வேண்டிய பாடம்” என்று திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்