Aran Sei

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை – எடப்பாடி அறிவிப்பு, ஸ்டாலின் கேள்வி

னைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன. புதுச்சேரியிலும் அண்மையில் ஆன்லைன் ரம்மிக்கு ஒருவர் பலியானார்.

ஆன்லைனில் பணத்தையும் உயிரையும் எடுக்கும் சூதாட்டம் – சியாம் சுந்தர்

இதையடுத்து, இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “இளைஞர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையைச் சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  “ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கச் சட்டம் கொண்டுவரவேண்டுமென்று கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்பது ஏன்? தெலங்கானா தடை செய்திருக்கிறதே” என்று  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது!” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார் .

வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தொடர்ந்த பொதுநல வழக்கில் மெட்ராஸ் உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு விளம்பரதாரராக நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போதைய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் தமன்னா, பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி “ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக outlookindia.com இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்