Aran Sei

வயலில் பரவிய கச்சா எண்ணெய் – ஓ.என்.ஜி.சி குழாய் வெடிப்பு

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் நிலத்துக்குள் பதிக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி குழாயிலிருந்து கச்சா எண்ணெய் வெளியாகி விளைநிலத்தை சேதப்படுத்தியிருக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி தனசேகரன், 5 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார். அந்நிலத்தின் அடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் பதித்த குழாய் பதித்து கச்சா எண்ணெய் கீழவெள்ளக்குடியிலுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தனசேகரனின் 5 ஏக்கர் வயல் முழுவதும் கச்சா எண்ணெய் பரவிக்கிடந்துள்ளது. அருகிலுள்ள வயலுக்கும் பரவும்படியாக குழாயிலிருந்து எண்ணெய் வெளியாகிக் கொண்டிருந்தது. இதனையடுத்து ஓ.என்.ஜி.சி பணியாளர்கள் பாதிப்புக்குள்ளான இடத்துக்கு வந்து கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  மேலும் எண்ணெய் குழாய் வெடிப்புக்கான காரணத்தையும் ஆய்வு செய்தனர்.

இது முதன்முறை அல்ல என்றும் ஏற்கனவே 2018-ம் ஆண்டும் இதே போன்று தான் பாதிக்கப்பட்டதாக நில உரிமையாளர் தனசேகரன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

“2018-ம் ஆண்டும் இதே போன்று வெடிப்பு ஏற்பட்டு எனது வயல் முழுவதும் நாசமானது. அப்போது, புதிய கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்காமல் சேதமடைந்த குழாயை மட்டும் ஓஎன்ஜிசி  நிறுவனம் சீரமைத்துத் தந்தது. 15 லட்சம் ரூபாய் செலவு செய்துதான் எனது வயலின் மண்ணை முழுவதுமாக மாற்றி விதைப்புக்குத் தயார்படுத்தினேன். இப்போது மீண்டும் குழாய் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சாகுபடி நேரத்தில் எங்களது வயல்களை நாசப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பரவியுள்ள கச்சா எண்ணெயை அகற்றி விட்டு, ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான உரிய இழப்பீட்டை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வழங்க வேண்டும்” என தனசேகரன் கூறியுள்ளார்.

ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்புக்கு எதிராக சூழலியலாளர்களும், விவசாய சங்கங்களும் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற விபத்துகளை எப்படிப் பார்க்கலாம்? என எழுத்தாளரும், சூழலிய செயற்பாட்டாளருமான பாமயனிடம் கேட்டதற்கு…

“கச்சா எண்ணெய் மண்ணின் தன்மையை முற்றிலுமாக சீர்குலைத்து, அதன் விளைதிறனை பாதிக்கும். மேலும் அது நிலத்தடி நீரில் கலந்து விட்டால் இன்னும் கொடூரமான பல விளைவுகளை ஏற்படுத்தும். மட்டுமின்றி மேற்பரப்பு நீர் வளத்திலும் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். மண் மற்றும் நீர் வளம் சார்ந்துதான் விவசாயமே இருக்கிறது. இவ்விரு வளங்களையும் நாசமாக்கும் என்பதால் இக்குழாய் பதிப்பு என்பது விவசாயத்துக்கு முற்றிலும் எதிரானது. நீடித்த வளர்ச்சிக்கு எதிரானது. ஆகவேதான் இக்குழாய் பதிப்புக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பினால் ஏற்படும் விளைவுகளுக்கு இது போன்ற விபத்துகள் சிறிய உதாரணம்தான்.” என்கிறார் பாமயன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்