Aran Sei

`20% கிராமப்புற மாணவர்களிடம் பாடப்புத்தகங்கள் இல்லை’ – தன்னார்வக் கல்வி அமைப்பு ஆய்வு

credits : medium

ந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 2005-ல் இருந்து ஆண்டுதோறும் பள்ளிக் கல்வி ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள், கல்விநிலையின் ஆண்டறிக்கை (ASER – அசர்) என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது.

‘பிரதம்’ என்ற தன்னார்வக் கல்வி அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த ஆய்வின்போது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனரா? கிராமப்புறப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா? என்பன பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் அடிப்படை கற்றல் திறன் ஆய்வு செய்யப்படுகிறது.

கடந்த ஆறுமாத காலமாகக் கொரோனா நோய்த்தொற்றினால் பள்ளிகள் செயல்படவில்லை. இந்நிலையில் மாணவர்களின் கல்வி கற்றல் நிலை குறித்து செப்டம்பர் மாதம் இந்தியாவின் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓர் ஆய்வை மேற்கொண்டது அசர்.

கொரோனா முழுஅடைப்பு – கிராமப்புறப் பெண் குழந்தைகளின் கல்விக்கு வேட்டு

கிராமப்புற இந்தியாவில் இருக்கும் 52,227 குடும்பங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றிருக்கின்றன. இந்த ஆய்வு முழுவதும் தொலைபேசி மூலமாக நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் இருக்கும் 20% கிராமப்புற மாணவர்களிடம் பாடப்புத்தகங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மாநில வாரியாக

  • ஆந்திரப்பிரதேசம் – 65% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை.
  • ராஜஸ்தான் –  40% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை.
  • மேற்கு வங்கம், அஸ்ஸாம், நாகாலாந்து – 2% பள்ளி மாணவர்களிடம் பாடப்புத்தகம் இல்லை

என அசர் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மேலும், கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களில் மூன்றில் ஒருவர் கல்வி கற்பதற்கான எந்தச் சூழலிலும் இல்லை என்றும், மூன்றில் இருவரிடம் பாடப்புத்தகங்கள் இல்லை என்றும், பத்துப் பேரில் ஒருவர்தான் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு 2018-லிருந்து தற்போது வரை இரண்டு மடங்காக உயர்ந்தாலும், பள்ளிகள் மாணவர்களுக்குப் படிப்பதற்கான பாடங்களை அனுப்புவது இல்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு கொரோனா விதிமுறைக்கு உட்பட்டுப் பள்ளிகளைத் திறப்பதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டாலும், மாநில அரசுகள் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளைத் திறக்க ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் இருக்கும் 25 கோடி மாணவர்களும் கடந்த ஏழு மாத காலமாக வீட்டில்தான் இருக்கிறார்கள்.

இந்த ஆய்வு கிராமப்புற மாணவர்களின் கல்வி கற்க முடியாமல் தவிக்கும் நிலையை அம்பலப்படுத்தியிருக்கிறது. மேலும் பொருளாதார வசதியில் மேம்பட்டுள்ள குடும்பங்களாலும் பள்ளிகளாலும் டிஜிட்டலாக மாறியிருக்கும் கல்வி மாணவர்களிடையே பெரும் பாகுபாட்டை உருவாக்கியிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறது அசர்.

அவசியமா ஆன்லைன் வகுப்புகள் – கல்வியா? உயிரா?

2018-ம் ஆண்டு அசர் மேற்கொண்ட ஆய்வில் பள்ளிக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள் வீடுகளில் 36% ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாகத் தெரிய வந்தது. இந்த ஆண்டு இதனுடைய எண்ணிக்கை 62% உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் 11% குடும்பங்கள் புதிய கைபேசி வாங்கியுள்ளதாகவும் அதில் 80% ஸ்மார்ட்போன் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளன

  • 5.3% பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படவில்லை. 2018-ல் நடத்தப்பட்ட ஆய்வில் 1.85% மட்டுமே சேரவில்லை.
  • செப்டம்பர் 2020 வரை 20% கிராமப்புற மாணவர்களிடம் பாடப்புத்தகங்களே விநியோகிக்கப்படவில்லை.
  • 70% கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அதில் 11% பேர் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
  • 36% கிராமப்புற மாணவர்களுக்குப் படிப்பதற்குத் தேவையான தகவல்களைப் பள்ளிகள் அனுப்பியிருக்கின்றன அவற்றுள் 76% தகவல் பரிமாற்றம் வாட்ஸ் அப் மூலம் நடைபெற்று இருக்கிறது.

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூன்றில் இரண்டு மாணவர்களுக்குப் பள்ளிகள் படிப்பதற்கான எந்தப் புத்தகங்களையும் கொடுக்காமல் இருப்பது தெரிய வருகிறது.

  • பீகாரில் 8%-க்கும் குறைவான மாணவர்கள் படிப்பதற்கான புத்தகங்களைப் பெற்றிருக்கிறார்கள்
  • மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 20%-க்கும் குறைவான மாணவர்கள் படிப்பதற்கான புத்தகங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
  • கேரளா, குஜராத், ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 80%-க்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் பல மாணவர்கள் சுயமாகப் படித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொரோனா காலத்தில் மாணவர்கள் எதன் மூலம் படித்தார்கள்?

  • 70% மாணவர்கள் – பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்.
  • 11% மாணவர்கள் – ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டதாகவும்.
  • 21% மாணவர்கள் – பதிவு செய்யப்பட்ட காணொலிகளில் பாடங்களைப் படித்ததாகவும், (இதில் பெரும்பான்மையானோர் தனியார் பள்ளி மாணவர்கள்)
  • 60% மாணவர்கள் – பாடப்புத்தகங்கள் மூலம் படித்ததாகவும்.
  • 20% மாணவர்கள் – தொலைக்காட்சிகளின் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் மூலம் கற்றதாகவும்

தெரிவித்துள்ளனர். மேலும் பெற்றோர்களின் கல்வித் தகுதி  மற்றும் அவர்களுடைய பொருளாதார நிலைமை இதில் பெரிய பங்கு வகித்துள்ளது என அசர் தெரிவித்துள்ளது.

”பள்ளிகள் திறக்கப்பட்டதற்குப் பின்பு, கிராமப்புற மாணவர்கள் திரும்பவும் பள்ளிகளுக்குச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்” என்று அசர்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

The Hindu இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்