Aran Sei

’என்.எல்.சி விபத்தில் பலியான 20 தொழிலாளர்கள் – நிர்வாகமே காரணம்’ – பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு அந்நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களின் பாதுகாப்புக் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம், கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி) அனல்மின் நிலைய அலகுகளில் நடந்த விபத்தில் 5 தொழிலாளர்கள், ஜூலை மாதம் நடந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சங்கம் அமைத்ததற்காக பணியிட மாற்றம் – வீடியோவை வெளியிட்டு காணாமல்போன தொழிலாளர்

“மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு என்.எல்.சி. நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியிருந்தார்.

இந்த விபத்துகள் குறித்து ஊடகங்களில்  வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்துள்ளது.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

அதேநேரம், சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கே.ஆர்.செல்வராஜ் குமார் என்பவரும், “ஆயுட்காலம் முடிந்த பின்னரும் அனல் மின் நிலைய அளவுகளை இயக்கி வந்த காரணத்தால்தான் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் இந்த அனல்மின் நிலைய அழகுகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்.” என்று கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த விபத்து (நன்றி : newindianexpress.com)

இந்த வழக்கில் விபத்து குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு சமீபத்தில் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், ”அனல்மின் நிலைய கொதிகலனை தூய்மைப்படுத்துவதற்கு தனித்த வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை, பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப் படவில்லை, பாதுகாப்பு மேலாண்மை செயல்முறை அமைப்பு அமலாக்கப்படவில்லை, பயிற்சி பெற்ற ஊழியர்கள் பணியிலமர்த்தப்படவில்லை.” என்று குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் : ஷியாம் சுந்தர்

மேலும், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படவில்லை, அதிக வெப்பத்திலிருக்கும் லிக்னைட் மீது தண்ணீரை ஊற்றினால் ஏற்படும் பாதிப்பை கையாள்வது குறித்த விளக்கம் அவசர கட்டுப்பாடு திட்டத்தில் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அந்த அறிக்கையில், உயிரிழந்த ஊழியர்களுக்கு மொத்தமாக ரூபாய் 5 கோடியே 57 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த இழப்பீட்டுத்தொகை நியாயமான முறையில் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு ரூ. 3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் நிதியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார்.

பன்னாட்டு முதலாளிகளுக்கான தொழிலாளர் மசோதாக்கள்: ஜி.ராமகிருஷ்ணன்

இதை தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு, இந்த அறிக்கையை பரிசீலித்து தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், “என்.எல்.சி-யில் நடந்த விபத்திற்கு என்.எல்.சி. நிர்வாகமும், அதன் அனல்மின் நிலைய இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு  தலைமை அதிகாரியும், பாதுகாப்பு அதிகாரியுமே பொறுப்பு. பாதுகாப்பு நெறிமுறைகளை அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் அனைத்தையும், என்.எல்.சி. நிர்வாகம் பின்பற்ற வேண்டும்.” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?

என்.எல்.சி அனல்மின் நிலைய அலகுகள் இன்னும் 6 ஆண்டுகள் இயக்க தகுதியானவையாக இருப்பதாக கொதிகலன் கண்காணிப்பு இயக்குனர் சான்றளித்துள்ளதால் அனல்மின் நிலைய அலகுகளை இயக்க தடை விதிக்க முடியாது என்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து அனல்மின் நிலைய அலகுகளும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர் தரவு தளம்: மத்திய அரசு உருவாக்குமா?

மேலும், அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வை, மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை தேசிய பசுமை தீர்பாயம் முடித்து வைத்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்