Aran Sei

’தமிழகத்தில் என்ஐஏ கிளை – மாநில உரிமைக்கு எதிரானது’: அ.மார்க்ஸ்

credits:theprint.in

சென்னை உட்பட மூன்று நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை கிளைகள் நிறுவுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், சென்னை, ராஞ்சி மற்றும் இம்பால் ஆகிய முக்கிய நகரங்களில் கிளைகள் அமைப்பது குறித்து அறிவித்துள்ளது.

புதிய என்ஐஏ கிளைகள் அமைக்க வேண்டி மத்திய அரசு எடுத்துள்ள முடிவு, முக்கியமான சூழல்களில் புலனாய்வு முகமை விரைந்து செயல்பட உதவும் எனவும் என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.

 

தீவிரவாதம் மற்றும் தேசப்பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் உடனுக்குடன் செயலாற்றும் என்ஐஏ-வின் திறனை இந்த நடவடிக்கை பலப்படுத்தும் எனவும் அறிக்கையில் கூறியுள்ளது.

குற்றங்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை தாமதமின்றி சேகரிக்கவும் இந்தக் கிளைகள் உதவியாக இருக்கும் என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டெல்லியை தலைமையகமாக கொண்டுள்ள என்ஐஏ, கௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்பூர், சண்டிகர் ஆகிய ஒன்பது நகரங்களில் கிளை அலுவலங்கள் அமைத்து இயங்கி வருகின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராக புதிதாக பதவி ஏற்றுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, பெங்களூருவில் என்ஐஏ கிளை அமைக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியாக சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

சென்னையில் தேசிய புலனாய்வு முகமையின் கிளை அமைக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் அவர்களிடம் அரண்செய் பேசிய போது;

“தமிழகத்தில் புலனாய்வு முகமைக்கான தேவை ஒன்றும் இல்லை. இது மாநில அரசின் உரிமைகளை முற்றிலும் ஒடுக்குவதற்கான முயற்சி மட்டுமே. இதனால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. தொல்லை மட்டுமே மிஞ்சும்.” என்றார்.

”என் ஐ ஏ தனிப்பட்ட முறையில் கைது நடவடிக்கை எடுக்கவும் வழக்கு தொடரவும் முடியாது. ஆனால், மாநில அரசு தொடர்ந்துவரும் வழக்கில் என்ஏஐ தானாக முன்வந்து ஈடுபடுகையில் வழக்கு மீது மாநில அரசுக்கு உள்ள கட்டுப்பாடு முற்றிலும் அறுபடும்.” எனவும் குறிப்பிட்டார்.

“மக்களுக்காக குரல் கொடுக்கும் சிந்தனையாளர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி, விசாரணை என்ற பெயரில் ஆண்டு கணக்கில் முடக்கி வைப்பதைத்தான் என்ஐஏ தொடர்ந்து செய்து வருகிறது.” எனக் கூறினார்.

credits:vallinam.com

“பீமா கோரேகான் கலவர வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 80 வயதான வரவர ராவ் தனியாக கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறார். அவரை வீட்டில் வைத்து கவனித்துகொள்ள வேண்டி குடும்பத்தினர் கேட்ட போது ‘சாகக் கிடப்பவர் வீட்டில் செத்தால் என்ன, சிறையில் செத்தால் என்ன?’ என்று என்ஐஏ கேட்டது. இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர், “தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருக்கையில் மாநிலத்தில் என்ஐஏ கிளை நிறுவப்படுவதை தடுத்து வந்தார். அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் இதை அனுமதிப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.” எனவும் அ.மார்க்ஸ் கூறியிருக்கிறார்.

 

இதனிடையே, பாஜக கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா இதுகுறித்து ட்விட்டரில், “சென்னையில்  NIA கிளை மிக அவசியமாகும். வரவேற்கத்தக்க முடிவு.” என தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்