Aran Sei

1,600 மெகாவாட் ராமநாதபுரம் உப்பூர் அனல்மின்நிலையத் திட்டம் – நிறுத்தி வைத்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

image credit ; thehindubusinessline.com

1,600 மெகாவாட் உப்பூர் அனல்மின்நிலைய திட்டத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறுத்தி வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனம் ராமநாதபுரத்தில் 1,600 மெகாவாட் திறனுடைய அனல் மின் நிலையத்தையும் அதற்கான கடலோர கட்டுமானங்களையும் உருவாக்குவதற்கான மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற்றிருந்தது.

இந்தத் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் பெற்றுள்ளது என்று ஹிந்து பிசினஸ் லைன் 2018-ல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் அருகில் உள்ள ஏரிகள், விவசாய நிலம், கடல் உயிரினங்கள் ஆகியவற்றை பாதிக்கும் என்றும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்படவுள்ள ஒரு பாலத்தின் கீழ் உயரமான பாய்மரங்களைக் கொண்ட பாரம்பரிய படகுகள் செல்ல முடியாது என்றும் கூறி பகுதி விவசாயிகளும் மீனவர்களும் இந்தத் திட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர்.

மேலும், 100% இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்துவது என்ற முடிவை மாற்றி உள்நாட்டு நிலக்கரியையும் கலப்பது என்ற டேன்ஜெட்கோவின் முடிவு காற்று மாசுபடுதலை மோசப்படுத்தும் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

பகுதி மக்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தையும் பிற அரசு நிறுவனங்களையும் அணுகியதைத் தொடர்ந்து, கையகப்படுத்தப்பட்ட 1,342 ஏக்கர் நிலத்தில் 26% மட்டுமே விவசாய நிலம் என்றும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்றும் டேன்ஜெட்கோ கூறியிருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

இப்போது, ராமநாதபுரத்தில் உள்ள உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், நிலக்கரி பற்றிய புதிய பகுப்பாய்வு நடத்துமாறும், பாலம் பற்றிய பிரச்சினையை ஆய்வு செய்யமாறும் டேன்ஜெட்கோவிடம் கூறியுள்ளது.

நிபுணர் ஆய்வுக் குழுவின் சுயேச்சையான விசாரணைக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட அனுமதியை வழங்குமாறு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்