Aran Sei

நீட் தேர்வு : ஆளுநரைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர்

credits : deccan chronicle

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிப்பது குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது. இது குறித்து விசாரித்து அரசுக்குப் பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங்கைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், உள் ஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கடந்த புதன்கிழமையன்று ஆளுநரைச் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தியதாகவும் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்குப் புதன்கிழமையன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறும் என்றும் இந்தக் கல்வி ஆண்டிலேயே அவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று தெரிவித்த ஸ்டாலின், கட்சிகளுடன் கலந்துபேசி போராட்டத்தை அறிவிக்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது பதில் அளித்துள்ளார்.

“இதுகுறித்து முடிவெடுக்க எனக்கு 3 முதல் 4 வாரங்கள் தேவை” என்றும் “சமீபத்தில் என்னைச் சந்தித்த அமைச்சர்கள் குழுவிடமும் இதே தகவலைத் தெரிவித்தேன்” என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதனையே தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால், திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

“மாணவர் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆகவே, சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும். அழுத்தம் கொடுக்கத் தவறி மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் அக்டோபர் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்த முதல்வர் இதை “அரசியல் ஆதாயம் “ தேடும் செயல் என்றும் நீட் தேர்வு என்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து மாணவர்களுக்குத் துரோகம் இழைத்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை என்று கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும் இதில் ஸ்டாலின் அரசியல் செய்வதாகவும் முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, இவர்களை சமநிலையில் வைத்துப் பார்ப்பது சமநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை. எனவேதான், அரசு பள்ளியில் படித்த நான், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து, கடந்த 21.3.2020 அன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என  அறிவித்தேன்.

இந்த 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், ஏழை எளிய மாணவர்களுக்குச் சம நீதி வழங்க இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இதற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அறிவித்தபடி ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழகத்தில் இல்லை. மாற்றுகருத்து இருந்தாலும் கூட ஜெயலலிதா இருந்தபோதும்  நீட் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. தற்போதைய அதிமுக அரசு அடிமையாக இருப்பதின் காரணத்தினால் நீட் தமிழகத்தில் நுழைந்துவிட்டது“ என்று கூறினார்.

“பதவியைப் பெறுவதற்கு மட்டும் தவழ்ந்து போய் ஊர்ந்து போய் யார் காலிலோ விழுந்து பதவியைப் பெற்றீர்களே, ஆளுநரிடத்திலே மன்றாட முடியாதா? காலில் விழ வேண்டாம், அழுத்தம் திருத்தமாகக் கேட்க முடியாதா என்று கேள்வியெழுப்பினார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா அல்லது ஆளுநரா என்பதை கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி அரசு ஆளுநரைக் கேள்விகேட்காது என்பது தெரிந்தே ஆளுநர் இவ்வளவு அலட்சியத்துடன் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரைச் சந்திக்க இருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்