Aran Sei

மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை. நீட் தேர்வால் மற்றொரு உயிர் பலி

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியுமா என்கிற அச்சத்தில் மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் மருத்துவராக வேண்டும் என்கிற குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா எனத் தெரியாததால் இம்முடிவினை எடுத்த்தாக கடிதம் மற்றும் ஆடியோ பதிவு மூலம் குடும்பத்துக்குத் தெரிவித்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த காவல் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள்  ஜோதி ஸ்ரீ துர்கா. இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார். இதனை அடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக தயார் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடிதம் மூலமும், ஆடியோ பதிவு மூலமும் தனது தற்கொலைக்கான காரணத்தைத் தெரிவித்து விட்டு அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

“அப்பா, இதுக்கு யாரையும் blame பண்ணாதீங்க. இதுக்கு யாரும் காரணம் இல்லை. நான் நல்லாத்தான் படிச்சேன். இருந்தும் பயமா இருக்கு. ஒரு வேளை ஃபெயில் ஆயிடுவேனா?னு பயமா இருக்கு. சீட் கிடைக்கலைன்னா நீங்க எல்லாருமே ஏமாந்திடுவீங்க. சாரி அப்பா… சாரி அம்மா… டாட்டா” என்று அழும் குரலில் அவர் பேசிய உருக்கமான ஆடியோ பதிவு கேட்பவர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் தற்கொலை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை” எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது “நீட் மட்டுமே எதிர்காலம் அல்ல; மாணவர்கள் நீட்டை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்” என பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் நீண்ட காலமாக போராடி வரும் சூழ்நிலையில் நீட் தேர்வு பயத்தால் நிகழும் மாணவர்கள் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

“நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா வரையிலான மாணவர்கள் தற்கொலைகளின் மூலம் உணர முடிகிறது” என்றும், “மீண்டும் சொல்கிறேன். தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல” என்றும் தனது அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

“நீட்டை ரத்து செய்தால்தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும்” என்றும் “மத்திய அரசின் பிடிவாதத்தால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?” என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.

“நீட் தேர்வுக்கு தீர்வே இல்லையா? நாட்டை ஆள்வோருக்கு நெஞ்சில் ஈரமே இல்லையா?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளார். மோடி அரசு நீட் தேர்வைக் கை விட வேண்டும் எனவும், மருத்துவக் கல்வி தொடர்பாக மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளட்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“நீட் ரத்தே தற்கொலைகளுக்குத் தீர்வு” என பா.ம.க மாநில இளைஞரணித் தலைவர் அண்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வு அச்சத்தின் விளைவாக நிகழும் தற்கொலைகள் குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும்” எனவும் “குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

“பிறக்கும் யாருக்கும்  தங்களை அழிக்கும் உரிமை இல்லை” என்றும் “நீட் தேர்வு என்னும் சமூக அநீதியைத்தான் அழிக்க வேண்டுமோ தவிர உயிர்களை அல்ல” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

“நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல; மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகள்” என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

“ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு அவ. போன தடவை நீட் தேர்வுல ஃபெயில் ஆகிட்டா. இந்த முறை பாஸ் பண்ணிடனும்னு ரொம்ப தீவிரமா படிச்சிட்டு வந்தா. நேத்து நைட் கூட நல்லாத்தான் பேசிட்டிருந்தா. காலைலக்குள்ள இப்படிப் பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்ல” என்று மாணவியின் தந்தை முருகசுந்தரம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்