Aran Sei

நீட் நுழைவுத்தேர்வால் இதுவரை நிகழ்ந்த உயிர்ப்பலிகள்

Dr.Anitha MBBS

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை நடைபெற உள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா என்ற மாணவி தேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து பேசிவரும் நிலையில், 2017 முதல் நீட் தேர்வு தொடர்பான மாணவர் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

2017ம் ஆண்டு மத்திய அரசு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்திருந்ததை எதிர்த்து, அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற போதிலும் நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண் பெறாததால் 2017 செப்டம்பர் 1-ம் தேதி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

2018-ம் ஆண்டு நீட் தேர்வுகள் வெளியாகியபோது தமிழகத்தில் 39.55% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளரின் மகள் மாணவி பிரதீபா(17) தேர்வில் தோல்வியடைந்த வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

அதே வாரத்தில், திருச்சியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் சென்று படித்துவந்த போதும் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தேர்வு முடிவுகள் வெளியாகி மூன்று மாதங்கள் கழித்து 2018 செப்டம்பரில் தேர்வில் தோல்வியடைந்த வருத்தம் தாங்காமல் சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் ஸ்ருதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவர் பொறியியல் படிப்புக்கு சேர்க்கப்பட்டு கல்லூரிக்கு சென்று வந்தபோதும் மருத்துவ கனவு நிறைவேறாததால் மூன்று மாதகாலமாகவே யாருடனும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி சில மணிநேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்த அரை மணி நேரத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா, தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இரண்டு மாணவிகளும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90%க்கு அதிமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர்.

மறுநாள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேட்டைச் சேர்ந்த சேர்ந்த மாணவி மோனிஷாவும் நீட் தேர்வி தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்தமுறை தேர்வில் தோல்வி அடைந்திருந்த நிலையில் நடக்க இருக்கும் தேர்வில் தேர்ச்சி அடைவோமா என்ற அச்சத்தில் ஆகஸ்டு மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

நடப்பாண்டில், தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காததால் நுழைவுத்தேர்வு எழுத முடியாமல் போகும் என்ற பயத்தால் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவி ஹரிஷ்மா விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொள்ளி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிஷ்மா செப்டம்பர் 1-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத நிலையில், இந்தாண்டு நுழைவுத் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். தேர்வு குறித்த மன உளைச்சலால், செப்டம்பர் 9-ம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

விக்னேஷ் இறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு தந்த மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நீட் தேர்வு மிகுந்த மன உளைச்சலைத் தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்