Aran Sei

தமிழக மருத்துவக் கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநிலத்தவர்கள் எப்படி நுழைந்தனர் ? – ஸ்டாலின் கேள்வி

credits : indian express

தெலங்கானா மாநிலத்தில் எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள 34 பேர் தமிழக அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப்  பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆள் மாறாட்டம், ஓஎம்ஆர் ஷீட் மாறியதாக எழுந்த புகார், என நீட் தேர்வு தொடர்ந்து சர்ச்சையைச் சந்தித்து கொண்டிருக்க, தற்போது, மருத்துவ கலந்தாய்விலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள பல மாணவர்களின் பெயர்கள், நீட் தேர்வுக்கான பதிவு எண்கள் கேரளா, தெலங்கானா மாநிலங்களில் வெளியான ரேங்க் பட்டியல்களிலும் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழக அரசு ஒதுக்கீட்டு பட்டியலில் முதல் 10 மாணவர்கள் பட்டியலில் 705 மார்க் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ள மோகனப்பிரியா ரவிச்சந்திரன் என்ற மாணவி,  கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5 ஆம் இடம்பெற்றுள்ள விவரம் தெரியவந்துள்ளது.

அதேபோல, தமிழகத்தில் வெளியிடப்பட்ட ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள 34 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும்  இடம்பெற்றுள்ளது அம்பலமாகி இருக்கிறது.

நீட் தேர்வு – அரசு ஆதரவுடன் சாதிக்கும் தெலங்கானா எஸ்சி, எஸ்டி மாணவர்கள் : நவநீத கண்ணன்

ஒரே நபருக்கு 2 இருப்பிட சான்று கிடைத்தது எப்படி என்றும், இதன் பின்னணியில் அரசு அதிகாரிகள் இருக்கின்றனரா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசின் அலட்சியமே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் “திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

`நீட் மற்றும் 7.5 % இட ஒதுக்கீட்டில் அடிமை அரசின் நாடகங்கள்’ – விளக்கும் ஸ்டாலின்

‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்களின் கனவு ஒவ்வொரு ஆண்டும் சிதைக்கப்பட்டு வருகிறது. இதனால் 13 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வின் ஆறாத் துயரம் தமிழக மாணவர்களை ஒருபக்கம் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியின் ஆசிகளுடன் நடக்கும் நீட் முறைகேடுகள் இன்னொரு பக்கம் மாணவர்களின் இதயத்தில் வேதனைத் தீயைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

”2020-21-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன “ என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

”ஒரே மாணவர் எப்படி இரு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்?. அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றனர்? தெலங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் எப்படி இடம் பெற்றனர்? ”என்று ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

”ஆகவே 2020-2021-ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் கல்வியில் சேருவதற்கான நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்