Aran Sei

விஜய் சேதுபதிக்கு இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் கோரிக்கை

முத்தையா முரளிதரன் பெயரளவில் மட்டும் தான் தமிழர் என்றும், 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்றும் இலங்கையின் “வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம்” கோரிக்கை வைத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது. அதில், முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டது. ’800’ எனும் பெயரில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது.

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை முத்தைய முரளிதரன் ஆதரித்ததாகவும் ஆகவே முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடக்க கூடாது என்றும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு விளக்கம் கூறும் விதமாக, முத்தையா முரளிதன் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்,”நான் இலங்கை அணியில் இடம்பெற்றுச் சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாகப் பிறந்தது எனது தவறா?” என்ற அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்ததையா முரளிதரனின் வரலாற்று திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என  இலங்கையில் செயல்படும் “வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின்  சங்கம்” வேண்டுகோள் வைத்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பில் அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்கள்.

அப்போது பேசிய சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, ” முத்தையா முரளிதரன் பெயரளவில் மட்டுமே தமிழர்” என்றும் காணாமல் போன உறவுகளை தேடி கடந்த 1337 நாட்களாகக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தான் ஈடுபட்டு வருவதாகவும், இச்சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 78 பேர் மரணித்துள்ளதாகவும் கூறினார்.

இந்த போராட்டத்தையும் அவரையும், முத்தையா முரளிதரன் கொச்சைப்படுத்தியதாகவும், மிகக் கடுமையாக விமர்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, விஜய் சேதுபதி முத்தைய முரளிதரனின் வேடத்தை ஏற்று 800 திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

– செய்தியாளர் காந்தகுமார், இலங்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்