Aran Sei

“இலங்கைத் தமிழனாகப் பிறந்தது எனது தவறா?” – முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’-யைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ளன. அதற்கான விளக்கம் கூறும் விதமாக, முத்தையா முரளிதன் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு நடிகர் விஜய் சேதுபதி நடிக்க, ’800’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

இலங்கை கண்டியில் பிறந்த முத்தையா முரளிதரன், இளம் வயதில் கிரிக்கெட்டின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தார். பல போராட்டங்களுக்குப் பின் இலங்கை அணியில் இடம் கிடைக்கிறது. அதற்குப் பின் சாதனைகள், சர்ச்சைகள் என அவர் கிரிக்கெட் வாழ்க்கை போகிறது. 1992-ம் ஆண்டில் இருந்து, 2011-ம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளராக மாறுகிறார் முத்தையா முரளிதரன்.

800 விக்கெட் எடுத்த சாதனையைப் போற்றும் விதமாக ’800’ என்று படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் (அக்டோபர் 13), இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டிக்கு இடையில் வெளியிடப்பட்டது.

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க, எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதி, தமிழ் மக்களின் அன்பை இழக்கப்போகிறார் என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், விஜய் சேதுபதிக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும், கடைக்கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்புமே காரணம்.” என்கிறார்.

”நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்கள் எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.” என்றும் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஆதரவாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

”முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கக் கூடாது என்று விஜய் சேதுபதியைச் சொல்கிறார்கள். இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் ஒரு தமிழர்தான். அரசியல் தொடர்புகள் உள்ளவர். அதன் பயிற்சியாளராக முத்தையா உள்ளார். ஏன் அவர்களிடம் போய் கேட்கவில்லை. விஎஸ்பி ஒரு நடிகர். அவரைக் கட்டுப்படுத்த நினைக்காதீர்.”

இந்நிலையில், இத்திரைப்படத்தைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான விளக்கத்தைக் கூறும் விதமாக, முத்தையா முரளிதன் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு ஒப்புக்கொண்டது குறித்துக் கூறுகையில், “என்னைப் பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன்.

பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்குப் பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் எனப் பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்குக் காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்தத் திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.” என்கிறார்.

போர்ச் சூழலால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, “இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால், போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர்ச் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது.” என்று வருத்தப்படுகிறார்.

”நான் 2009ஆம் ஆண்டுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019இல் கூறியதை, “தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்” என திரித்து எழுதுகிறார்கள்.” என்று தான் பேசிய சில கருத்துகள் தவறாகத் திரித்துச் சொல்லப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “என் பள்ளிக் காலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது.

ஒரு சராசரி மனிதனாகப் பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த 10 வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதுமில்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாள் என்ற கருத்தினைத் தெரிவித்திருந்தேன். ஒரு பேதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்.” என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தனக்கு தமிழ் தெரியாது என்று சொல்லப்படுவது குறித்தும், தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர் என்று கூறியது குறித்தும் அவர் அறிக்கையில், “அடுத்த எனது பள்ளிக் காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றொரு தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர் என முரளி கூறுகிறார் எனச் சொல்கின்றனர்.

இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகமாக வாழ்வதால் எல்லோரிடமும் ஒரு தாழ்வுமனப்பான்மை இருக்கத்தான் செய்யும். அது இயற்கை. அது என்னிடத்திலும் இருந்தது. காரணம் எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில்தான் இருந்தார்கள். அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னைப் பங்கேற்கத் தூண்டியது.

எனது முயற்சியால் அணியில் சேர்ந்தேன். எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவேதான் தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள் என்ற எண்ணத்தில்தான் கூறினேன்.” என்று விளக்கம் அளிக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு அவர் செய்து வரும் நலதிட்டங்களைப் பற்றியும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

“ஐ.நாவின் உணவுத் தூதராக இருந்தபோது 2002 ஆம் ஆண்டு எல்டிடிஈயின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கும் அந்தத் திட்டத்தை எடுத்துச் சென்றது முதல் பின் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவர்.

போர் முடிவுற்ற பின் கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான Foundation of Goodness மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவனக் கிளைகள் மூலம் குழந்தைகளுக்குக் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் எனப் பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன். மக்கள் நல்லிணக்கத்துக்காக வருடா வருடம் MURALI HARMONY CUP என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இது போல ஏராளமான விடயங்கள் உள்ளன.” அடுக்குகிறார்.

இறுதியாக, ”நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாகப் பிறந்தது எனது தவறா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்