Aran Sei

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரானவரா?

இலங்கையின் திருகோணமலையை தலைநகராகக்கொண்ட கிழக்கு மாகாணத்திற்கும் கண்டியைத் தலைநகராகக் கொண்ட மலையகப் பகுதியான மத்திய மாகாணத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சோமாவதிய தேசியப் பூங்கா. இலங்கையில் உள்ள 26 தேசியப் பூங்காக்களில் ஒன்றான இது, 5,734 சதுர கி.மீ (2,214 சதுர மைல்) பரப்பளவை கொண்டுள்ளது.

சோமாவதியா தேசியப் பூங்கா மகாவேலி ஆற்றின் நீர்ப்பிடிப்பு சமவெளிகளில் அமைந்துள்ளது. இங்கே யானை போன்ற வன விலங்குகளுடன், பல அரியவகை விலங்குகளும் வசித்து வருகின்றன.

சோமாவதியா தேசிய பூங்கா (நன்றி : flickr.com)

டோல் நிறுவனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ’டோல்’ என்ற நிறுவனம், உலகின் பெரிய பழ உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. 90-க்கும் மேற்பட்ட நாடுகளில், பழங்களையும் காய்கறிகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. வாழைப்பழம், அன்னாசி, ஸ்ட்ராபரி, திராட்சை போன்றவை இதன் முக்கிய உற்பத்திகள்.

டோல் நிறுவனம் இலங்கை நிறுவனமான ’லெட்ஸ் க்ரோ’ (Letsgrow Ltd) உடன் இணைந்து, சோமாவதிய தேசியப் பூங்கா வனப் பகுதியில், 5000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி வாழை பயிரிட்டு உலக நாடுகளுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்திருப்பதாக ‘பிபிசி’ செய்தி வெளியிட்டிருந்தது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு ‘பிபிசி’ –யுடன் பேசியபோது, “5000 ஏக்கர் நிலம் இதற்குத் தாரைவார்க்கப்பட உள்ளது. அதற்காக வனத்தின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட உள்ளன. இங்கே அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகளும் நீர் எருமைகளும் உள்ளன” என்று கூறியது.

லெட்ஸ் க்ரோ நிறுவனத்தை பற்றிக் கூறுகையில், “இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனும் பிரமோதிய விக்ரமசிங்க என்ற மற்றொரு இலங்கை கிரிக்கெட் வீரரும் சேர்ந்தே, ராணுவத்திடம் இந்த இடத்தை வாங்க இருந்தார்கள்” என்றது அந்த அறக்கட்டளை.

போர் முடிந்த பின்னர் இலங்கையை வளர்ச்சிப் பாதையில் கட்டியெழுப்பவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை விரும்புகிறது. ஆனால், இவர்கள் முன்மொழியும் திட்டமானது, தேசியப் பூங்காவில் பல விலங்குகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் மகாவேலி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சூறையாடப் பார்க்கிறது. மேலும் அந்தத் திட்டத்தால் ஏற்படும் நன்மையைவிட, பாதிப்புகளே அதிகமாக உள்ளதால் இதை எதிர்ப்பதாக அறக்கட்டளையின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக ‘பிசிசி’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

டோல் நிறுவனத்திற்கு எதிராகப் போரட்டில் ஈடுப்பட்ட மக்கள் (நன்றி : viacampesina.org)

வனப்பகுதிகளில் உள்ள கிராமவாசிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றோரின் கடும் எதிர்ப்புகளுக்குப் பின், இந்தத் திட்டத்திலிருந்து ‘டோல்’ நிறுவனம் பின்வாங்கியது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புச் சலுகைகளை வழங்குவதோடு, அந்த வனப் பகுதியின் பாதுகாப்பிற்கும் உறுதியளிப்பதாக நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

இதுகுறித்து, ’இனியொரு’ தளம் வெளியிட்ட செய்தியில், “இந்தப் பிரச்சனை குறித்து, முரளிதரன் தரப்பு மூச்சு கூட விடவில்லை. முரளியின் ‘மண்டேலா’ ராஜபக்ச எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இங்கு கேள்வி இதுதான். முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும் எதிரானவரா? முத்தையா முரளிதரன் போன்றவர்கள் ராஜபக்சவின் முகவர்களாகச் செயற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியதை விட பன்னாட்டு நிறுவனங்கள் என்ற பெயரில் வரும் கொள்ளையர்களின் முகவர்களாகச் செயற்படுவதன் ஊடாக அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.

’800’ திரைப்படம் தொடர்பாக விஜய் சேதுபதி மன்னிப்புக் கோர வேண்டும் என்று லண்டனில் போரட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைப் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உடனடியாக அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டிய கட்சியான நாம் தமிழர், அருவருப்பான வெறுப்பு அரசியலை முன்வைக்கிறது. தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் தமிழரசுக் கட்சி போன்ற வலது சாரி அமைப்புகள் கூட மொழி வெறியை முன்வைத்து அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை. விஜய் சேதுபதி என்ற நடிகரை நோக்கிக் கோரிக்கை வைப்பது என்பது ஒவ்வொருவரது உரிமை. அவரை மிரட்டுவது என்பது வன்முறை. வாக்கு பொறுக்குவதற்காக ஈழத் தமிழர்களைப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர இந்தக் கும்பல் எந்த நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.” என்று கடுமையாகச் சாடியுள்ளது அந்த இணையதளம்.

லண்டனில் போரட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர்

“7 தலைமுறையாக தமிழ் நாட்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டப்பொம்மனையே தெலுங்கன் என்று தூற்றும் இந்தக் கும்பலின் இன வெறி, தேசியத்திற்கும் தேசங்களின் உருவாக்கத்திற்கும் எதிரானது… ஒவ்வொரு தமிழனையும் டீ.என்.ஏ சோதனை செய்து தமிழன் என்று உறுதிப்படுத்தக்கோரும் அருவருப்பான நாம் தமிழர் குழு ஒரு அரசியல் சாபக்கேடு.” என்று நாம் தமிழர் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தரின் பல், இந்தச் சோமாவதிய வனப்பகுதியில்தான் புதைக்கப்பட்டதாக இலங்கையில் ஒரு நம்பிக்கை உண்டு.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்