Aran Sei

“சூரப்பாவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் என்ன?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

credits : the news minute

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் நியமனத்தில் 200 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புகாரளித்தார்.

”அண்ணா பல்கலைக் கழக வளாகம் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க ஒவ்வொருவரிடமும் 13 முதல் 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்” என்று சூரப்பா மீதும் அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லுாரிகளின் நிர்வாக பிரிவின்  துணை  இயக்குனர்  சக்திநாதன்  மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு, மகளை பணியில் சேர்த்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் சூரப்பாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு.

சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் தமிழக அரசு அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம் என்ன?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்

“சூரப்பாவை உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்து, ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலமைச்சர் பழனிசாமி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் – அந்தத் துணை வேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“ஒருவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல பல முறை ஆளான போதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும் போதும் முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்துவரும் போது, நமக்கு மட்டும் என்ன என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை, 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்ததது அ.தி.மு.க. அரசு? இந்த 9 மாதங்கள் இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன? என்பது தனி விசாரணைக்குட்பட்டது” என்று கூறியுள்ள ஸ்டாலின் “இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணை வேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்” என கூறியுள்ளார்.

280 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்கல்வித்துறையின் அரசு ஆணையில், “தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது” என்று துணை வேந்தர் சூரப்பா மீதும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்குத் தெரிந்த பிறகும் முதலமைச்சர் பழனிசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் அந்த இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்யாமல் பாதுகாப்பது ஏன்?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது, தி.மு.க. ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும், அதே போல் அ.தி.மு.க. ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும் ஸ்டாலின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் விசாரணை ஆணையம் நாளைய தினம் தனது விசாரணையைத் துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் – மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணை வேந்தரை உடனடியாக சஸ்பென்ட் செய்வதுதான் நேர்மையான – நியாயமான விசாரணைக்கு வழி விடும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சூரப்பா தான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை எனவும், விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்