Aran Sei

அரசு மருத்துவர்களுக்கு துரோகம் செய்த அதிமுக – ஸ்டாலின் கண்டனம்

மிழக அரசு மருத்துவர்களுக்கு, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக அரசு வாதாடி பாழ்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் கலந்தாய்வைக் கால தாமதம் செய்து அவர்களுக்கு, அதிமுக அரசு துரோகம் இழைத்திருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமலேயே 2020-21 கல்வியாண்டிற்குச் சேர்க்கைகள் நடத்த வேண்டும் என்று நேற்று (நவம்பர் 27) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2020-21 கல்வியாண்டின் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளின் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஆணைகளுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு 2020 – 21 கல்வி ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த பாஜக அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கிடு வழங்க முடியாது என்று கடுமையாக வாதிட்டதன் காரணமாக, இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று மேற்கோள் காட்டியுள்ளார்.

“மேலும், பாஜக அரசின் துரோகத்திற்குத் துணை போகும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது என்றும் உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

போராடிப் பெற்ற சமூக நீதியின் பயன் அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போனதற்குக் கூட்டணியாக துரோகம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்