Aran Sei

தமிழக விவசாயிகளின் பழிச்சொல்லுக்கு ஆளாகாதீர்கள் – மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தைக் கூட்டி உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மாநிலத்தின் விலைமதிப்பற்ற சொத்துகளான விவசாயிகளின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் கடமை மாநில அரசுக்கு இருக்கிறதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020 (சட்டம் 20 – 2020)’, ‘விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020 (சட்டம் 21 – 2020)’, ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்- 2020( சட்டம் 22 –  2020)’ ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் அச்சட்டங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில், பொருள் 14-ன் படி வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், வேளாண்மையைப் பொறுத்தவரை சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருக்கிறது என்பதால் இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

இம்மூன்று சட்டங்களையும் எதிர்த்து ஏற்கனவே திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக சார்பிலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் தான் வலியுறுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்- 2020 (சட்டம் 22 –  2020)’ உள்ளிட்ட இம்மூன்று சட்டங்களுக்கும் எதிராகத் தமிழ்நாடு அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றும், தமிழக விவசாயப் பெருமக்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க, இந்த நடவடிக்கைகள் மிகமிக அவசரமும் அவசியமும் ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டுமென்றும் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்