Aran Sei

கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை – ஜெயகுமார்; இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து – பாஜக

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வீரமாமுனிவரின் 340-வது பிறந்த நாளை முன்னிட்டு, மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் “எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகின்ற நிலையில், கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த நிலைதான் 2021இல் வரும்” நம்பிக்கை தெரிவித்துள்ளார்

“இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிமுக சரித்திரத்தில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். கூட்டணி என்ற பேச்சுக்குத் தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

அமைச்சரின் இந்தக் கருத்துக் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணனிடம் அரண்செய் பேசிய போது ” இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து. இதனால் எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்பட வாய்ப்பில்லை ” என்று தெரிவித்தார்.

” முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க கூடாதென்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். திமுக , விசிக கட்சிகள் ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று போராடி வருகின்றன. கொள்கைகளில் முரண்பாடு வந்தால்தான் கூட்டணி உடையும். உடைவதாக இருந்தால் திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் உடையும் ” என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் கருத்துத் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்