Aran Sei

“பெரியாரை இழிவுபடுத்தினால் சிறைச்சாலைதான்” – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மத நல்லிணக்கத்தின் அடிப்படையிலேயே அதிமுக கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் அமையும் என்று மீன்வளம், பணியாளர் மற்றம் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரண்செய் ஆசிரியர் மு.அசீப், அமைச்சருடன் நடத்திய உரையாடலின்போது இதை அவர் கூறினார்.

யார் முதலமைச்சர் என்கின்ற கேள்வி அதிமுகவில் எழுந்துள்ளது குறித்தும் அதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது குறித்தும் அவரிடம் கேட்டபோது, அந்தப் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

சசிகலா சிறையிலிருந்து விடுதலையான பிறகு, தமிழக அரசியலில் ஒரு மாற்றம் நிகழலாம் என்று கூறப்படும் கருத்துகுறித்து அவர் பதிலளிக்கையில் அப்படி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை என்று ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

தொடக்கம் முதலே சசிகலாவையும், அவருடைய குடும்பத்தையும் தனக்குப் பிடிக்காது என்று கூறியுள்ள ஜெயக்குமார், சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றபோது அவரோடு செல்லாதது ஏன் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கையில் “இரட்டை இலை சின்னம் எந்தப் பக்கம் உள்ளதோ அந்தப் பக்கத்தில்தான் நான் இருப்பேன். ஆகவே, சசிகலா மீது அதிருப்தி இருந்தாலும் அன்று ஓ.பன்னீர்செல்வத்துடன் செல்லவில்லை” என்று பதிலளித்தார்.

இரட்டை இலை சின்னத்தின் மீது அவ்வளவு பற்றுள்ளவர், அந்தச் சின்னத்தையே முடக்கக் காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் செயலை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, கடந்த காலத்தில் நடந்ததை பேசுவதில் பயனில்லை என்று பதிலளித்தார்.

பாஜக அரசு அதிமுகவை இயக்குவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டை நேரடியாக மறுத்த ஜெயக்குமார், மத்திய அரசின் திட்டங்களில், ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். எதிர்க்கவேண்டியதை எதிர்ப்போம். ஆனால், மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறினார்.

மதச்சார்பின்மைக்கு எதிராகப் பாஜக செயல்படுவது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில் “`ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது அதிமுகவின் கொள்கை. சமத்துவம், எல்லா மதங்களும் மத்திக்கப்பட வேண்டும், மனிதர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அதிமுவின் கொள்கை” என்று கூறினார்.

அப்படியிருக்கு, இந்தக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவுடன், அதிமுக எப்படி கூட்டணி வைத்துள்ளது என்று கேட்டபோது, அதற்கு மீண்டும் அதிமுகவின் கொள்கைகளாக அவர் கூறியதை மீண்டும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் திமுகவிற்கும், பாஜகவிற்கும்தான் போட்டி என்று பாஜக தலைவர்கள் கூறிவருவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார், கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் இறுதியில் மக்கள்தான் அதை முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிய சில தலைவர்கள் பாஜகவில் இணைந்தது குறித்து கேட்டபோது அதிமுக பலமாக இருப்பதாகவும், பிற கட்சிகள்குறித்து கவலை இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

பாஜக தலைவர்கள் பெரியாரைத் தவறாகச் சித்திரிப்பது குறித்து கேள்வியெழுப்பியபோது “பெரியாரை அவமதிக்கும் ஈனத்தனமான செயலை யார் செய்தாலும் அது மிகப்பெரிய குற்றம். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். அந்த ஈனத்தனமாகச் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்“ என்று கூறினார்.

மேலும் “சமத்துவம், பெண்ணுரிமை, சாமானியனும் கூட அரசியல் மற்றும் அனைத்துத் தளங்களிலும் உயர்ந்து நிற்பதற்கு சமூகநீதி கண்டவர் தந்தை பெரியார். அவரை இழிவுப்படுத்தும் எந்தச் செயலையும் அதிமுக எந்த நிலையிலும் அனுமதிக்காது. அப்படிச் செய்தால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை” என்று காட்டமாகப் பதிலளித்தார்.

அத்துடன் “தேர்தல் வாக்குறுதி மற்றும் அதிமுக கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம்குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், மத நல்லிணக்கம், மாநில வளர்ச்சி, மத்திய அரசிடமிருந்து எல்லா உதவிகளும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அதிமுக கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் அமையும” என்று ஜெயக்குமார் கூறினார்.

 

ஜெயக்குமாருடன் நடத்திய முழு நேர்காணலை இங்குப் பார்க்கலாம் :

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்