Aran Sei

’இஸ்லாமியர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு; சரிவர நடைமுறைப்படுத்தவில்லை ’ – எம்.ஹெச்.ஜவாஹிருல்லா

2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றும் ஆனால், அதன் பிறகு வந்த அதிமுக அரசு அதைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 2) திருச்சியில், எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், முழுக்க முழுக்கப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவானதாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள பெரு முதலாளிகளின் செல்வத்தை மேலும் உயரவைக்கும் வகையிலான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. இந்தியாவைப் பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது: ‘இஸ்லாமியர் என்பதால் பலிகடா ஆனேன்’ – நதீம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை என்றும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்துள்ளது என்றும் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

“மாநிலங்களுக்கு எவ்வித பங்களிப்பும் வராத செஸ் வரியை விதித்துள்ளது. இது, மாநிலங்களை வலுவிழக்கச் செய்யும் செயல். செஸ் வரி விதிப்பால் ஏற்கெனவே உள்ளதைக் காட்டிலும் விலைவாசி உயர்வு மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 8 வழிச் சாலைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், பட்ஜெட்டில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறியிருப்பது மாநில உரிமையைப் பறிப்பதாக அமைந்துள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆளுநர் எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில், சட்டபேரவை ஆளுநர் உரையிலும் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று எம்.ஹெச்.ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை, தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறக் கூடாது, மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நபிகளை இழிவுப்படுத்தி பாஜக கல்யாண ராமன் பேச்சு: இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து கைது

மேலும், “2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு வந்த அதிமுக அரசு அதைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீதம்தான் முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்தப் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்