Aran Sei

மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்- விசிக போராட்டம்

”மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் சனாதன இந்து தர்மத்தில் என்னவாக மதிப்பிடப்படுகிறார்கள் ,நடத்தப்படுகிறார்கள் ,காலங்காலமாக இவர்கள் எப்படி நசுக்கப்படுகிறார்கள் சுரண்டப்படுகிறார்கள்.

சனாதன தர்மம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது ? பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தைகளாக படைக்கப்பட்டவர்கள். All women are prostitutes as per manu dharma. 

எல்லா பெண்களுமே விபச்சாரிகள் தான் கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள்  இது பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும் அடிநிலையில் கிடக்கிற இதர பெண்களுக்கும் பொருந்தும் “ என்று மனுதர்மம் கூறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசிய காணோளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக பாஜக- வினர் ட்விட்டரில் கடுமையான எதிர்வினையை செய்து வருகின்றனர். பாஜகவைச் சார்ந்த காயத்ரி ரகுராம் மற்றும் சில பாஜகவினர் திருமாவளவன் மீது தனி மனித தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

#திருட்டுபையதிருமாவளவன் என்ற பதிவு இந்துத்துவவாதிகளாலும்

#பெண்ணுரிமைப்போராளிதிருமா என்ற பதிவு முற்போக்குவாதிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்களாலும் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது.

அதில் #பெண்ணுரிமைப்போராளிதிருமா  என்பது தமிழக அளவில் முதலிடத்தில் இருந்தது.

இந்துத்துவவாதிகளுக்கு எதிராக  நாளை ( 24-10-2020 ) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்றிய பேரூர்களிலும் நகரங்களிலும் மனுதர்மத்தை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில்

”காலம் காலமாகப் பெண்களை இழிவுசெய்யும் #மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி. 24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் தமிழ் நாடெங்கும் விசிக ஆர்ப்பாட்டம். அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்! ஆயிரம் தலைமுறைஇழிவைத் துடைப்போம்! #rejectmanu”

என்று பதிவிட்டிருந்தார் திருமாவளவன்.

கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று  பெரியாரும் இந்திய அரசியலும் எனும் தலைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்புச் சார்பில் நடத்தப்பட்ட இணைய வழி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். அது பெரியார் டிவி எனும் யூட்யூப் சேனலில் ஒளிபரப்பட்டது.

40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த காணோளியில் , பெண்கள் குறித்து சுமார் 6 நிமிடங்களுக்கு உரையாற்றியிருக்கிறார் அதில் வெறும் 50 நொடிகளை மட்டும் வெட்டி பரப்படுகிறது .அந்த 50 நொடிகளுக்குப்பின் அவர் பேசியது.“எல்லா பெண்களுக்கும் தீட்டு உண்டு” “எல்லா பெண்களும்,பிறந்த குழந்தையாக இருக்கும்பொழுது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.திருமணமான பிறகு கணவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். குழந்தை பெற்றப் பிறகு மகனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பேரப்பிள்ளை எடுத்தப்பிறகு ஆண்பிள்ளையாக இருக்கிற பேரப்பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஏன் இப்படி 10 வயது சிறுவன் 80 வயது  பாட்டிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் கருதுகிறது?”

“பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது அவர்கள் மீதான அக்கறையால் அல்ல அவர்கள் கற்போடு இருக்க வேண்டும்  என்பதனால். கற்பு என்பதை சனாதன தர்மம் மிகவும் புனிதமாக கருதுகிறது ஆனால் அது ஆண்களுக்கல்ல பெண்களுக்கு மட்டும் தான். எனவே பெண்கள் கற்பு அடிப்படையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் தான் பெண்களுக்கு கல்வியை மறுத்தது , பெண்களுக்கு சொத்துரிமையை மறுத்தது , பெண்களுக்கு கருத்துரிமையை மறுத்தது , பெண்கள் விவகாரத்து செய்து கொள்ள உரிமை இல்லை என்று மறுத்தது , விதவை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று மறுத்தது , குழந்தை திருமணத்தை நியாயப்படுத்தியது 6 வயது பெண்ணிற்கும் 8 வயது ஆணிற்கும் திருமணம் செய்து வைத்து அந்த சிறுவன் 10 வயதில் இறந்து போனால் அந்த 8 வயது பெண் குழந்தை 80 வயது வரையில் வாழ நேர்ந்தால் கூட அவள் விதவையாகவே வாழ வேண்டும்  இல்லற வாழ்வை மேற்கொள்ளக்கூடாது விதவைகள் மறுமணம் கூடாது என்பதை எந்த மதம் சொல்கிறது.”

“பெரியார் இந்து மத விரோதி இந்து மக்களுக்கு விரோதி என கூறுவார்கள் ஆனால் பெண்களுக்கு சொத்துரிமை கூடாது, பெண்களுக்கு கருத்துரிமை கூடாது, பெண்கள் விவகாரத்து செய்து கொள்ள கூடாது , விதவை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறியது சனாதன தர்மம் தான் ”

“இதையேல்லாம் 1920 களிலேயே உணர்ந்து இதற்கெதிராக மக்களை திரட்டி போராடிய ஒரு போராளி தான் தந்தை பெரியார் .பெண்களை பற்றி வேறு யாருமே சிந்திக்காத காலத்தில் சிந்த்தித்தவர் பெரியார் .பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் மனுதர்மத்தை மறுத்தாக வேண்டும் மனுதர்மத்தை மறுக்கும்பொழுது கடவுள் மறுப்பு பார்ப்பனிய எதிர்ப்பு என்பது தானாக வருகிறது “ என்று உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில் இன்று இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”இன்றைக்கு பெண்கள் மிகவும் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவதால் இதற்கு காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் மனுதர்மம் என்னும் கருத்தியல் தான் காரணம் என்பதை நம் முன்னோர்கள்  பலரும் கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மதை கொளுத்துவோம் என்று கொளுத்தியிருக்கிறார் . அதே போன்று பெரியாரும் கொளுத்தியிருக்கிறார்.”

“இப்படி மனுதர்மம் இந்த சமூகத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ,ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தியிருக்கிறது , பெண்களை அடிமைப்படுத்தியிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை நாடறியும்.

இந்நிலையில்தான் மனுதர்மம் பெண்களை கொச்சைப்படுத்துகிறது எனும் அர்த்தத்தில் நான் பேசியதை அரசியல் ஆதாயம் தேடுகிற சாதிவெறிப்பிடித்த, மதவெறிப்பிடித்த கும்பல் திட்டமிட்டு எனக்கெதிரான பொய்பரப்புரைகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள்.

பெண்களுக்கு எதிராக நான் பேசியதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள் அது முற்றிலும் பொய். பெண்களுக்காக வாதாடுகிறோம் பெண்கள் மீட்சி பெற வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கிறோம் என்பதை பொறுத்து கொள்ள முடியாத ஆணாதிக்க வெறிப்பிடித்த சனாதன கும்பல் இப்படிப்பட்ட அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறது இதற்கெதிராக ஒருபோதும் அஞ்ச போவதில்லை “ என்று கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இது போன்ற துருப்புச் சீட்டுகளை கையிலெடுத்திருக்கிறார்கள் இதற்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும்” என்று கூறினார் திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தையினரின்  போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிக்கை விடுத்திருக்கிறார் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி. அந்த அறிக்கையில்

”தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெட்டி உருவி எடுத்து, அதை வைத்துக்கொண்டு கேவலமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். மனு சாஸ்திரத்தில் இல்லாத எது ஒன்றையும் அவர் பேசி விடவும் இல்லை; அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசி விடவும் இல்லை. என்றபோதிலும் இந்த ஆணவக் கூட்டம் ஆடை அவிழ்வதும் தெரியாமல் ஆட்டம் போடுகிறார்கள்.

இந்த ஒரு நல்வாய்ப்பை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் மனு சாஸ்திரத்தைத் தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். எல்லா பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களுக்கும் உடன்பாடான உவப்பான ஒரு போராட்டம் தான்.

இந்த மனு சாஸ்திரத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபெறுகிற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்