Aran Sei

‘பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்’ – உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை 3-வது முறையாக தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர்  விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட, இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட காவல்துறையினரை சேர்ந்த 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக அரசின் உத்தரவின் பேரில், தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் 3-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

காவல்துறை விசாரணையில் வியாபாரி மரணம் – சாத்தான்குளத்தை தொடர்ந்து மற்றொரு நிகழ்வு

அப்போது மனுதாரர் தரப்பு, ஜூலை 2-ம் தேதி முதல் ஏறக்குறைய 130 நாட்களுக்கு மேலாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் உள்ளார் என்றும் அவருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால் அவர் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டது.

சிபிஐ தரப்பில், “காவலில் வைத்து கொடூரமாக தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். குற்றப்பத்திரிக்கை செப்டம்பர் 25-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க அதிக வாய்ப்பு உள்ளது.” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

முக்கிய சாட்சிகள் அதே துறையில் பணியாற்றுபவர்கள் என்பதால், ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ”இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மனுதாரர் சிபிஐ விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தெரிகிறது. ஆகவே ஜாமீன் வழங்க இயலாது.” என்று தெரிவித்துள்ளனர்.

மரணமாவது எங்களுக்கு நிம்மதியைத் தரட்டும் – காவல்துறையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பம்

“காவல் மரணங்கள் மனித தன்மையற்றது மட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கு எதிரானது. காவல் மரணங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியவை. பொது மக்களுக்கு சேவை வழங்கும் அரசு துறையினரால் பொதுமக்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை என தெரிய வருகிறது. பொதுமக்கள் காவல் நிலையம் செல்வதற்கே பயப்படுகின்றனர்.” என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவு காவல்நிலைய மரணங்கள் ஏற்படுகிறது என்றும் அதனால் தமிழக காவல்துறை தலைவர் இந்த வழக்கின் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுவதாக நீதிபதி கூறினார்.

”பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மோசமாக நடத்துவது, காரணமின்றி காக்க வைப்பது போன்றவற்றை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கையை தமிழக காவல்துறை தலைவர் அனைத்து காவல் நிலையங்களுக்கும், அனுப்ப வேண்டும். மேலும் அனைத்து காவல் நிலையத்திலும், புகார் அளிக்க வருபவர்களின் உரிமைகள் குறித்து, ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்பட்டிருக்கும் பலகைகளை வைக்க வேண்டும்.” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அவை முறையாக இயங்குகிறதா என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும்  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட வேண்டும் என்று கூறி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு முன்னர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஒன்பது காவல்துறையினர்  ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும் சிலர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரணை செய்த நீதிபதி பாரதிதாசன் ”தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிலரும் மதுரை நீதிமன்றத்தில் சிலரும் மனு தாக்கல் செய்து உள்ளார்கள். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருவதால் எங்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளதாக தெரிகிறது.  இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பாரதிதாசன் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பாரதிதாசன் அமர்வு “ சிபிஐ நீதிமன்றம் மதுரையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் ஜாமின் கோரிய மனு  மற்றும் விசாரணை வழக்குகள் என்று அனைத்தும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும். இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரம் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. எனவே விசாரணையும் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தான் நடைபெறும்.” என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்