Aran Sei

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: தளர்வுகள் உண்டா?

Image Credits: The Hindu

மிழக அரசு, அக்டோபர் 30-ம் தேதி வரை கொரோனா பொது ஊரடங்கை நீடித்துள்ளது. ஆனால் மேலும் சில தளர்வுகளுடன் இது அமலாக உள்ளது. கடந்த மாதம் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இரவு 10 மணி வரை கடைகளுக்கு நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம்.

உணவகங்களுக்கு சென்று உணவு உண்பதற்கும், பார்சல் சேவைகளுக்கும் தலா ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செட்டில் 100 நபர்களுடன் சினிமாவுக்கான படப்பிடிப்பு நடத்தப்படலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

“தமிழக அரசு செப்டம்பர் மாதம் முக்கியமான தளர்வுகளை அறிவித்தது, அதே சமயத்தில், தொற்று பரவலும் மாநில அளவில் குறைந்தது. இறப்பு சதவிகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று முதல்வர் கூறியுள்ளார்.

அதிகாரிகளுடன் சந்திப்பு

செவ்வாயன்று தலைமை செயலகத்தில் மருத்துவ, பொது சுகாதார நிபுணர்களுடனான அவரது சந்திப்பு மற்றும் மாவட்ட ஆணையர்களுடனான அவரது காணொளி மாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து நாள் ஒன்றிற்கு கூடுதலாக 50 விமானங்கள் சென்னையில் தரையிறங்க அனுமதிக்கப்படும். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் சேலம் விமான நிலையங்களுக்கு இது போன்ற தளர்வு இல்லை.

அரசு மற்றும் அரசுசார் பயிற்சி நிறுவனங்கள் பேரிடர் வழிகாட்டு நெறிமுறைக்கு இணங்கச் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிலையான இயக்க முறைக்கு இணங்க மட்டும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாராந்திர மதுபான கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

“ஒரு இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு எதிரான தடை உத்தரவுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன,” என்று கூறிய முதல்வர், மாநிலம் முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு இந்தத் தளர்வுகள் பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ரயில் சேவைகள்

சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிரான உத்தரவுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

புறநகர் ரயில் சேவைகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும். மத, சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார, கல்வி மற்றும் பிற கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடைகளும் நடைமுறையில் இருக்கும், என்றார் முதல்வர்.

முகக்கவசங்கள் அணியுமாறும், வீட்டிலும் அலுவலகங்களிலும் அடிக்கடி கைகளை கழுவுமாறும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

“நீங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும்,” என்று அவர் கூறியுள்ளார்.

திருமணங்கள், இறுதிச் சடங்குகள், பிற குடும்ப விழாக்களில் பங்கேற்கும்போதும், மத இடங்களுக்குச் செல்லும்போதும், தொற்றுநோய் பரவாமல் இருக்க அரசாங்க வழங்கிய வழிகாட்டுதல்களை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்’

நேற்று, ஆணையர்களுடன் நடந்த காணொளி கூட்டத்தில், ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு மாதிரிகள் எடுக்கும்போதும் முடிவுகளை அறிவிக்கும் போதும் முதியவர்கள் மற்றும் பல நோயுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க வழிமுறைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்றுகின்றனவா என்பதை சரிபார்க்கவும் முதலமைச்சர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு 5-ம் கட்ட தளர்வுகளை தற்போது அறிவித்துள்ளது.

அதில், அக்டோபர் 15-ம் தேதி முதல், சினிமா தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 15-ம் தேதி முதல் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்