Aran Sei

தலைமையை கண்டுபிடிக்க முடியாத கட்சி நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்? – குஷ்பு காட்டம்

Credits: Twitter

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள நடிகை குஷ்பு பாரதிய ஜனதா
கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்வித் பத்ரா, பொதுச் செயலாளர்
சி.டி. ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர்
முன்னிலையில் நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில்
இணைந்துள்ளார்.

நிகழ்வில் பேசிய எல்.முருகன், “கடந்த ஆறு மாதமாகவே தமிழக
பாஜகவில் மிகப்பெரிய அளவிலான மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல அரசியல்
கட்சியைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள், இளைஞர்கள், மகளிர், பட்டியலின
மக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பாஜக கட்சியை நோக்கி
வந்துள்ளார்கள்.”

“மத்தியில் நரேந்திர மோடியின் தலைமையில் நேர்மையான ஆட்சி
நடைபெற்றுக்கொண்டிருப்பதே இந்த மாற்றத்துக்குக் காரணம். மோடியின்
ஆட்சி, அவர் வழிகாட்டுதல் தமிழகத்திலும் வேண்டும் என மக்கள்
நினைக்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

பின்னர் பேசிய நடிகை குஷ்பு, “நாடு முன்னோக்கி நகர்வதற்கு பிரதமர்
நரேந்திர மோடியைப் போன்ற தலைமை மற்றும் வழிநடத்தல் வேண்டும்
என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.” என்று கூறினார்.

“மோடியின் ஆட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ள நாட்டின்
லட்சக்கணக்கான மக்கள் சார்பில் நான் இங்கு பங்கேற்றிருக்கிறேன்.
கட்சிக்காகப் பணியாற்றி, வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில்
வெற்றியடைய என்னால் முடிந்த முயற்சிகளை
மேற்கொள்வேன்.” எனவும் உறுதி கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித் நடிகை குஷ்பு, “மாற்றம் ஒன்றே
மாறாதது. காங்கிரஸில் இருந்தபோது நான் பாஜக-வைக் கடுமையாக
விமர்சித்து இருக்கிறேன். ஆனால் நாட்டுக்கு எது நல்லது என இப்போது
புரியவந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பாஜகவை விமர்சிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருந்ததால் ’ராகுல் காந்தி ரஃபேலை எதிர்த்ததால்
நானும் எதிர்த்தேன்’ எனவும் கூறியுள்ளார்.

”பலமுறை பிரதமர் மோடி அவர்களுக்கு நேரடியாக நன்றி
தெரிவித்திருக்கிறேன். எதிர்க்கட்சியில் இருப்பதால் எல்லாவற்றையும்
எதிர்க்கக் கூடாது. நல்ல விஷயங்களைக் கட்டாயமாகப் பாராட்ட
வேண்டும். பிரதமர் மோடி மீதுள்ள நம்பிக்கையால் மக்கள் அவரை வெற்றிபெறச்
செய்துள்ளார்கள். இதுவரையில் பாஜக கட்சியில், கட்சித் தலைவர்கள்
மத்தியில் ஊழல் இல்லை.” என்று பிரதமரை குஷ்பு புகழ்ந்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி விவசாய மசோதாக்களுக்களை எதிர்ப்பது குறித்து, “நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தடுக்கப் பெரும்பான்மை இல்லை. மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தலைமையே கண்டுபிடிக்க முடியாத ஒரு கட்சி இந்த நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்? நாட்டுக்கு என்ன நல்லது
செய்துள்ளார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக என்ன நல்லது செய்துள்ளது? என்ற கேள்விக்கு,
“இனிதான் நடக்கும். நான் இப்போதுதானே கட்சியில்
இணைந்திருக்கிறேன். எல்.முருகன் சமீபத்தில்தான் இணைந்துள்ளார்.
பொறுத்திருந்து பாருங்கள்.” என்று கூறி இந்தக் கேள்விக்கு ஆறு மாதங்கள்
கழித்துப் பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது. தமிழ்நாடு தனிநாடு கிடையாது.
இந்தியாவுக்கு நல்லது செய்துவருகிறோம்.” என்றும் குஷ்பு
தெரிவித்துள்ளார்.

இந்திய வருவாய் துறை இணை இயக்குனர் சரவணன் குமரனும்
இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்