Aran Sei

குஷ்பு கட்சி தாவல் – ‘எங்களுக்கு நஷ்டமும் இல்லை அவர்களுக்கு லாபமும் இல்லை’ – கே.எஸ்.அழகிரி

நடிகை குஷ்பு கட்சியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, இன்று காலை கடிதம் எழுதிய நிலையில், டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பு அக்கட்சியில் இணைந்தார்.

குஷ்பு விலகுவதால், காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு 2010-ம் ஆண்டு மே மாதம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் சேர்ந்தார். திமுக-விற்குள் குஷ்புவுக்கு எதிர்ப்புகள் கிளம்ப 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திமுக-வில் இருந்து விலகினார் குஷ்பு.

பின் அதே ஆண்டு நவம்பர் 16-ம் தேதி சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்துக் காங்கிரஸில் இணைந்தார். அப்போது, “ என் வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எனது சொந்த வீட்டுக்கு வந்து விட்டதைப் போல் உணர்கிறேன். இந்திய மக்களை ஒன்றிணைக்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது” என்று கூறினார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்தார். கடைசியாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகப் பதவி வகித்தார். கடந்த சில நாட்களாக குஷ்பூ பாஜக-வில் இணையப்போவதாக வதந்திகள் வந்ததையடுத்து, “ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக்கொண்டு நான் பாஜக-வில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள்” என்று அதை மறுத்தார் குஷ்பு.

இந்நிலையில் இன்று (செப்.12) காலை சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், ”காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், முதன்மை உறுப்பினராகவும் செயல்பட்டு நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.

2014 மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் மோசமான நிலையில் இருந்தபோதுதான் நான் கட்சியில் இணைந்தேன். பணத்துக்காகவோ புகழுக்காகவோ நான் இந்தக் கட்சியில் இணையவில்லை.

கள உண்மை அறியாத, பொது மக்களின் அங்கீகாரம் பெறாத ஒரு சிலர், கட்சியின் உயர் பதவிகளில் இருந்துகொண்டு, கட்சிக்காக நேர்மையாக உழைக்க விரும்பும் என்னைப் போன்றவர்களை ஒடுக்குகிறார்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, பதவியிலிருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா அறிவித்தார்.

குஷ்புவின் பதவி விலகல் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமதி குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால், எத்தகைய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியினர் மேடை அமைத்தால், அதில் பேசிவிட்டு விளம்பரம் பெறக் கூடியவர். காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் பணியில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாதவர். அவர் கட்சியை விட்டு விலகுவதால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. அதேபோல, பாஜக-வில் சேர்வதால், எந்த லாபமும் அந்தக் கட்சிக்கு ஏற்படப்போவதில்லை. சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு குஷ்பு தீனி போட முடியும். அதைத் தவிர எந்த வகையிலும், யாருக்கும் எந்தப் பயனும் தரப்போவதில்லை.” என்று கூறியுள்ளார்.

குஷ்பு பாஜகவில் இணைந்தது தொடர்பாக, பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணனிடம் அரண்செய் பேசிய போது, “காங்கிரஸில் இருந்து யார் விலகி, எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குத் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் இல்லை. இங்கு காங்கிரஸ் அழிந்துகொண்டிருக்கும் கட்சி” என்று கூறினார்.

“அதற்குப் புத்துயிர் கொடுப்பதற்காக, தில்லியில் இருந்து இரண்டு தலைவர்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவர்களும் தில்லி தலைமையைத் திருப்திப்படுவதற்காக அங்கேயே உட்கார்ந்திருக்கிறார்கள், இல்லை ட்விட்டரில் உட்கார்ந்திருக்கிறார்கள். தெருவில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லை.” என்று கூறினார் ராதாகிருஷ்ணன்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்