Aran Sei

உயர்மின் கோபுரங்கள் விவகாரம் : ‘ விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் ’ – கே.எஸ்.அழகிரி

யர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அமைச்சர் தங்கமணி தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார் என்றும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அதுவரை பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.” என்று நினைவூட்டியுள்ளார்.

உழவன் மகன் என எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்பமாட்டார்கள் – வைகோ

“ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக நிலத்திற்கு இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 100 சதவிகித ‘சொலேசியம்’ எனப்படும் ஆதாரத் தொகையை, உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும். அனைத்து உயர் மின் கோபுரங்கள் திட்டங்களுக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.” என்று கே.எஸ்.அழகிரி கோரியுள்ளார்.

“தமிழக அரசு குறைந்தபட்ச இழப்பீடாக ரூபாய் 50 ஆயிரம் அறிவித்துள்ளது. அதை உயர்த்தி குறைந்தபட்ச இழப்பீடாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பயிர்களுக்கும் மரங்களுக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீராக இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். திட்டப்பாதையில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடுகள் உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்களுக்குச் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

’விவசாய சட்டத்தை ஆதரித்த எடப்பாடி அரசு ; தமிழக விவசாயிகள் மன்னிப்புக் கேட்கிறோம்’ – பி.ஆர்.பாண்டியன்

மேலும், “விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக நிலம், பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில், 13 மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அதுகுறித்து தமிழக அரசு உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.” என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பில் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

“அறவழியில் போராடிய பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 38 வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உயர்மின் கோபுரங்கள் பிரச்சினையில் மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பல்வேறு வழிகளில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 4 ஆண்டுகளாக அறவழியில் போராடி வருகிறார்கள்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘மோடியின் நண்பர் அதானியின் குடும்பத்திற்காக புலம்பெயரும் தமிழக விவசாயிகள்’ – இரா.முத்தரசன் கண்டனம்

“இந்நிலையில், கடந்த 04-01-2019 அன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அமைச்சரின் அறிவிப்பு இன்று வரை அறிவிப்போடு நிற்கிறது. அதனை நடைமுறைப்படுத்த அமைச்சர் சிறிதும் முயலவில்லை.” என்று கே.எஸ்.அழகிரி அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் 4 ஆ-ம் தேதி, அன்று மின்சாரத் துறை அமைச்சரைச் சந்தித்து இழப்பீடு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தை வழக்குகள் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்வைத்தனர் என்றும் ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அமைச்சர் தங்கமணி தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

புதிய அணை கட்டும் கேரளா : போராட்டத்தை அறிவித்த தமிழக விவசாயிகள்

ஏற்கெனவே, மோடி அரசின் மூன்று விவசாயச் சட்டங்களால் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடும் கே.எஸ்.அழகிரி, அவர்களை மேலும் கண்ணீர் சிந்தவிடாமல், தமிழக விரைந்து செயல்பட்டு அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்