Aran Sei

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

கேரளாவில் தண்டர்போல்ட் கமாண்டோக் குழுவால், சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடல், சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள பொது மயானத்தில் எரியூட்டப்பட்டுள்ளது.

தண்டர்போல்ட் அதிரடிப்படை

நேற்று முன்தினம் (நவம்பர் 3) முன்பு கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மீன்முட்டி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும், தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விடியற்காலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த மோதல் காலை 7 மணி வரை நீடித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் அதிரடிப்படையினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று ’தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளா காடுகளில் மீண்டும் ஒரு ” மோதல் ” – மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

மாவோயிஸ்டுகளை தப்பிச் செல்லவிடாமல், அதே இடத்தில் வைத்திருந்து சரணடையச் செய்வதற்காக அதிரடிப்படையினர் சுட்டதாகவும், ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் பின் வாங்கி காட்டுக்குள் மறைந்து விட்டதாகவும், மேலும் அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒருவரை விட்டுச் சென்றதாகவும் தகவல் கிடைத்து என்று ’தி ஹிந்து’ செய்தி தெரிவித்துள்ளது.

”இந்த மோதல் தண்டர்போல்ட் கமாண்டோக்களின் (அதிரடிப்படை) குழுவும் உள்ளூர் போலீசும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் நடந்தது” என்று தண்டர்போல்ட் மாநிலத் தலைவர் சைத்ரா தெரசா ஜான், ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் கூறியுள்ளார்.

தங்களது சுற்றிவளைப்பிலிருந்து தப்பி, தமிழ்நாடு, கர்நாடகா வனப்பகுதிகளுக்குள் சென்ற பிறரை, நாங்கள் தேடி வருவதாக தண்டர்போல்ட் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உறுப்பினரின் உடலை வயநாடு போலீஸ் சம்பவ இடத்திற்குச் சென்று பெற்றுக் கொண்டுள்ளனர். பின் அவரின் உடல், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு ‘போல்ட் ஆக்ஷன்’ துப்பாக்கியையும்,  துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளையும் அதிரடிப் படையினர் கைப்பற்றியதாக ’தி இந்து’ கூறியுள்ளது.

இதை கண்டித்து, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் டி.சித்திக்கின் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் கோழிக்கோடு மருத்துவமனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கேரள காவல்துறை சிதிக்கை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வேல்முருகன் என்று கேரள காவல்துறை சந்தேகித்துள்ளது.  இதை தொடர்ந்து நேற்று மாலை மூன்றரை மணி அளவில், வேல் முருகனின் தாய் கண்ணம்மாள், அண்ணன் ஏ முருகன் மற்றும் மூன்று வழக்கறிஞர்கள் சடலத்தை அடையாளம் காண, கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் கதறி அழும் வேல் முருகனின் தாய் கண்ணம்மாள் (நன்றி : newindianexpress.com)

சுடப்பட்டவர் வேல் முருகன் தான் என்று அவருடைய அண்ணன் ஏ. முருகன் அடையாளம் கண்டுள்ளார். பின், செய்தியாளர்களின் பேசிய முருகன் “செவ்வாய் காலையில் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் எங்களுக்கு இன்று (புதன்கிழமை) தான் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் குண்டடிப்பட்ட எல்லா பகுதியையும் காட்டாமல், முகத்தை மட்டும் தான் போலீஸார் காட்டினர்.” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது சகோதரர் வேல்முருகனின் உடல் துணியால் மூடப்பட்டிருந்ததாகவும், முழு உடலையும் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, காவல்துறையினர் அரை மணி நேரம் காத்திருக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

”பின்பு, உடலில் சில பாகங்களையே காட்டினர். மற்ற பாகங்கள் துணியால் மூடப்பட்டிருந்தது. இதுவே அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று சந்தேகத்தை கிளப்புகிறது. மார்பு, வயிறு மற்றும் கைகளில் சுடப்பட்டுள்ளது. ஒரு முறை சுட்டாலே, நிலைகுலைந்து கீழே விழுந்துவிடுவார்கள். அப்படியிருக்க ஏன் இத்தனை முறை சுட வேண்டும்? எனவே இது போலி என்கவுண்டர் என்று சந்தேகப்படுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

நன்றி : onmanorama.com

அடையாளம் காட்டப்பட்ட பின், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தாரிடம் ஓப்படைக்கப்பட்ட வேல்முருகனின் சடலம், தமிழக காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அவரின் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று (நவம்பர் 5) அதிகாலை, பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தில் வேல்முருகனின் சடலம்  அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக வேல்முருகனின் ஆதரவாளர்கள் கேரள மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

`மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு

மாவோயிஸ்டு வேல்முருகனின் சடலம் அடக்கம் செய்யப்படுவதை ஒட்டி பெரியகுளத்தில் தேனி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கியூ பிரிவு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வயநாடு மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் தளம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்ற ஆண்டு வயநாட்டில் காவல்துறையினருக்கும் மவோயிஸ்ட்டுகளுக்கும் நடந்த மோதலில், மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.பி.ஜலீல் என்பவர் கொல்லப்பட்டார்.

அக்டோபர் 2019-ல் கேரளா போலீஸ் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது. இதை போலி மோதல் கொலை என்று கேரளாவில் ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது.

“ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட சட்ட விரோதமான படுகொலை” என்று அக்கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது. மாவோயிஸ்டுகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சரணடைவதற்குக் கூட வாய்ப்பு கொடுக்காமல் அதிரடிப்படை சுட்டுக் கொன்றதாக, உண்மை அறியும் குழு அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.

“இந்த படுகொலைக்கு (வேல் முருகன்) நியாயமான விசாரனை வேண்டும். பினராயி தலைமையிலான அரசு பதவி ஏற்றப்பின், மாவோயிஸ்ட் என்று கூறி, இதுவரை 8 பேரை கொன்றுள்ளது. இந்த கொலையில் சந்தேகம் உள்ளது. இதை முதல்வர் பினராயி விஜயன் தெளிவுப்படுத்த வேண்டும்.” என்று காங்கிரஸை சேர்ந்த கேரள மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.

இதற்குமுன், உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மாவோயிஸ்ட்டுகளை கைது செய்து வழக்கு பதிவு செய்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவோயிஸ்டுகள் என்ற சந்தேகத்தின் பேரில், கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு தேசிய புலனாய்வு முகமையில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, கொச்சி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

’மாவோயிஸ்ட்’ வழக்கில் ஜாமீன். போராடுவது தேச துரோகமாகாது – கேரள நீதிமன்றம்

அதில், மாவோயிச புத்தகங்கள் வைத்திருப்பது, அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்குகொள்வது, வலுவான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பது ஆகியவற்றால் மட்டுமே ஒரு நபர் பயங்கரவாத நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்தது ஆகாது என தேசிய புலனாய்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, ‘தி வயர்’ செய்தி வெளியிட்டிருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் பழங்குடியினரின் நலனைப் பேணுவதற்கான மாதவ் காட்கில் அறிக்கையை அமல்படுத்தக்கோரும் துண்டறிக்கைகள், மாபெரும் ரஷ்ய புரட்சி (The great Russian Revolution) என்ற புத்தகம், கம்யூனிஸ்ட் தலைவர்களான மா சே துங், சேகுவேரா, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஜீலானி ஆகியோரின் புகைப்படங்கள், இஸ்லாமிய மற்றும் மார்க்சிய புத்தகங்கள் ஆகியவை, அந்த மாணவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த சில ஆதாரங்கள்.

இந்த ஆவணங்கள் எதுவும் வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்படி இல்லை எனக் கூறி தேசிய புலனாய்வு முகமையின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்