Aran Sei

” இது எங்கள் குடும்பச் சண்டை ” – கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விளக்கம்

ள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவால் ‘கடத்தித் திருமணம் செய்யப்பட்ட தன் மகளை மீட்டுத் தரக்’ கோரி உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரபு. நேற்று இவர் திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வரும் தன் காதலியான கல்லூரி மாணவி சவுந்தரியாவை, தன் குடும்பத்தார் முன்னிலையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

சவுந்தரியாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருகத்தில் உள்ள மலையம்மன் கோயிலில் குருக்களாக உள்ளார். இவர் தனது மகளை, எம்.எல்.ஏ. பிரபு, ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், இதுகுறித்துக் கேட்டதற்கு எம்.எல்.ஏ பிரபுவும் அவர் குடும்பத்தாரும் தன்னை மிரட்டுவதாகவும் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரைக் காவல்துறை எடுத்துக்கொள்ளவில்லை என்று சுவாமிநாதன் கூறுகிறார்.

கோபமுற்ற சுவாமிநாதன் எம்.எல்.ஏ பிரபுவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதனை அறிந்த காவல்துறை சுவாமிநாதனை மீட்டு, அவர்மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர். வடதோரசலூர் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி, தியாகதுருகம் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர்மீது தற்கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து சுவாமிநாதன் நேற்று வெளியிட்ட வீடியோவில், “கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவான பிரபு என்பவர் என் மகளை ஆசை வார்த்தைகள் பேசி கடத்திச் சென்று திருமணம் செய்திருக்கிறார். இதுகுறித்துக் காவல்துறையில் புகார் செய்தால் வழக்குப் பதிய மறுக்கின்றனர். எம்.எல்.ஏ பிரபுவும் அவரது தந்தையும் என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்.” என்றார்.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ பிரபு வெளியிட்ட வீடியோவில், “நானும் என் மனைவி சவுந்தர்யாவும் கடந்த நான்கு மாதங்களாகக் காதலித்து வந்தோம். அவளை பெண் கேட்டுப் போனேன். அவர்கள் தர மறுத்தார்கள். அதனால் சுவுந்தர்யாவின் முழுச் சம்மதத்துடன், என் அப்பா அம்மா முன்னிலையில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

வெளியில் சொல்லப்படுவது போல நான் சுவுந்தர்யாவைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துகொள்ளவில்லை. சுவுந்தரியாவின் அப்பாவையோ இல்லை அவரது குடும்பத்தையோ நான் மிரட்டவில்லை. எல்லாம் வதந்தி.” என்றார்.

இந்நிலையில் தன் 19 வயது மகளை பிரபு என்பவர் ஆசை வார்த்தை பேசி கடத்திச் சென்றதாகவும், தன் மகளை உடனே மீட்டுத் தரக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளை விசாரிப்பதாக உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து எம்.எல்.ஏ பிரபுவுடன் அரண்செய் பேசிய போது, “சவுந்தரியாவின் அப்பா இப்படி செய்யக்கூடியவர் அல்ல. எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியர் தான். ஆனால் அவரை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இதை நாங்கள் எளிதாக எதிர்கொள்வோம்.

எல்லா சாதி மறுப்புக் காதல் திருமணங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் வருவது சாதாரணம்தான். நான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் இவ்வளவு மீடியா வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இது எங்கள் குடும்பச் சண்டை. இதில் சவுந்தர்யாவின் அப்பாவான என் மாமனாரைப் பற்றி நான் தவறாகப் பேச முடியாது. இந்தப் பிரச்சனைகள் விரைவில் முடியும். என் மனைவி சவுந்தர்யா இது குறித்து தன் விளக்கத்தை வீடியோவாக விரைவில் வெளியிடுவார்.” என்றார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்