Aran Sei

ஜெயலலிதா மரண விசாரணை – பதவி காலத்தை நீட்டிக்கக் கோரி ஆறுமுகசாமி கடிதம்

Image Credits: India TV News

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி கமிஷன், பதவி காலத்தை நீட்டிக்கக் கோரி, அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது. ஏற்கனவே 8-வது முறையாக நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம், இம்மாதம் 24ம் தேதி முடிகிறது.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 75 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  2016 டிசம்பரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம் குறித்து விசாரிக்கத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனை 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் அமைத்தார்.

விசாரணை ஆணையம் தனது விசாரணையின் ஒரு பகுதியாக  மருத்துவ நிபுணர்கள், மருத்துவ ஊழியர்கள், அமைச்சர்கள் மற்றும் மாநில சுகாதார செயலாளர் உட்பட நுற்றுக்கணக்கானவர்களிடம் விசாரணையை நடத்தியது.

லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பேல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதில் நெருக்கமாக ஈடுபட்டதால், 2019 ஆம் ஆண்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

2019-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை விசாரணைக்குத் தடையாக இருப்பதாக ஆணையம் குற்றம் சாட்டியது. ஆணையக்குழுவுக்கு அறிக்கைகள் மற்றும் ஆவணங்களில் உள்ள மருத்துவ சொற்களையும், மருத்துவர்களால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் தன்மையையும் புரிந்து கொள்ளும் நிபுணத்துவம் இல்லை என்று மருத்துவமனை கூறியது. ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் வழக்கில், அரசு வழக்கறிஞர்கள் வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான மனு, நீதிமன்றம் விதித்த தடை ஆணையை நீக்குவதற்கான மனு போன்றவற்றை, உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை.

எனவே, அரசு வழக்கறிஞர்களுக்கு, அரசு உரிய அறிவுரைகளை வழங்கி, வழக்கை விரைவாக விசாரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விசாரணை கமிஷனின், கடிதத்தில் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வரின் மரணம் குறித்த விசாரணையை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர, சதியை வெளிக் கொண்டுவரத் தயாராக இல்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி, உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தொடுத்த மேல்முறையீட்டு விசாரணை தாமதமாவதை தமிழக அரசின் வழக்கறிஞரும், கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற ஒரு கடுமையானதும் முக்கியமானதுமான குற்றச்சாட்டை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

“அதிமுக அரசுக்கு எழுதிய கடிதத்திலேயே அவ்வாறு அவர் குறிப்பிட்டிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில், அதிமுக அமைச்சர்களே அப்போது சுட்டிக்காட்டிய சதியை விசாரித்து முடித்து வெளியிடுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தயாராக இல்லை; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதைச் சிறிதும் விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகிறது,” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்