Aran Sei

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

கடந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும், சில நேரங்களில் சுட்டுக்கொள்ளப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இலங்கைச் சிறையில் கைகால்கள் முடமாக்கப்பட்டு வீடுகளில் கிடப்பவர்களும் அவர்களின் துப்பாக்கிக்கு இரையாகிப் புகைப்படச் சட்டங்களில் குடியேறியவர்களும் வருடா வருடம் உயர்ந்துகொண்டேதான் வருகிறார்கள்.

தங்கள் அழுகைகளை அதிகாரத்தின் காதுகளுக்கு எட்டவைக்க, ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததால், தினமும் புழுங்கிக்கொண்டு இருக்கிறது இந்த மீனவக் கூட்டம்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஆர்.செந்திலுடன் அரண்செய்  நேர்காணல் செய்தது.

பாக் நீரிணையில் (தமிழகப் பகுதியில் தனுஷ்கோடியிலிருந்து வேதாரண்யம் வரை. இலங்கையில் தலைமன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான கடற்பகுதி) இப்போது என்ன நடக்கிறது?

பாக் நீரிணையைப் பொறுத்தவரை கடல் ஆழம் குறைந்த பகுதி. களி மண் நிறைய இருக்கும். இந்தக் களி மண்ணில்தான் இரால்கள் முட்டை இட்டு வாழும். உலகில் சிறந்த சுவையான இரால்கள் இங்கிருந்தே கிடைக்கிறது.

ஆகவே, இந்த இரால் பிடிப்பு இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் பிரதான தொழில். ஆழ்கடலில் மீன் பிடிப்பது போல இங்கே வலை விரித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிக்க முடியாது. இழு வலைகள் மூலமே பிடிக்க முடியும். பெரிய மீன்களைப் பிடிப்பவர்கள் பெரும்பாலும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆழ்கடலுக்குச் சென்றுவிடுவார்கள்.

தொழிற்சாலைக் கழிவுகளால் இப்போது நம் பகுதியில் உள்ள இரால்கள் அழிந்துவிட்டன. மேலும், தங்குதடை இல்லாமலும், எவ்விதக் கட்டுப்பாடுகள் இல்லாமலும் நடக்கும் மீன் பிடித் தொழிலும் ஒரு காரணம். இலங்கைப் பக்கம்தான் இப்போது மீன் இருப்பதால், நம் விசைப்படகு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டி இருக்கிறது.

பாக் நீரிணை – Palk Strait (நன்றி : Daily Mirror)

பாக் நீரிணையில் தொழில் செய்யும் இரு நாட்டு மீனவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்னவாக இருக்கிறது?

இலங்கையில் மீன் பிடித் தொழிலுக்குப் பத்து சதவீதம் ‘ஜிடிபி’ உள்ளது. அதனால் அதில் அதிக முதலீடுகள் செய்கிறார்கள். நமக்கு மொத்தம் ஒரு சதவீதத்திற்கு அருகில்தான் வரும். இலங்கை மீன் பிடித் தொழிலை இரண்டாகப் பிரிக்கலாம். அதில், கொழும்பு பகுதிகளான தெற்கு இலங்கையில் உள்ள மீனவர்கள் மீன் பிடித் தொழிற்நுட்பத்தில் நம்மைவிட உயரத்தில் உள்ளார்கள்.

இன்னொரு பகுதியினர் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரையில் உள்ள தமிழ் மீனவர்கள். இவர்கள் மீன் பிடித் தொழிற்நுட்பத்தில் நம்மை விட மிகவும் பின் தங்கியவர்கள். நாம் இரட்டை மடி, ஹார்ஸ் பவர் இஞ்சின்கள் என்று முன்னோக்கியுள்ளோம். அவர்கள் பாச்சு வலை, கூண்டு வைத்து மீன் பிடிப்பது என்று ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி உள்ளவர்கள். இந்த விஷயத்தில் நமக்கும் அவர்களுக்கும் பெரிய முரண்பாடு பாக் நீரிணைக்குள் வருகிறது.

பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், ‘நீலப்புரட்சி’ திட்டத்தின் கீழ், இந்தப் பிரச்சனைக்கு மாற்று ஏற்பாடுகளை முன் வைத்தார். அது என்ன திட்டம்? அது என்ன ஆனது?

அது ட்ராலர்களை (விசைப்படகுகள்) வெளியேற்றும் திட்டம்.  அதாவது நம்மாட்களுடைய இழு வலைகளையும் பெரிய விசைப்படகுகளையும் தடை செய்ய முடிவெடுக்கிறது. இந்தியச் சட்டப்படி 240 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள இஞ்சின்களைக்கொண்ட விசைப்படகுகள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் 500 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள இஞ்சின்களைக்கொண்ட விசைப்படகுகள் கூட இங்கே ஓடுகிறது.

திருவாரூரில் இருந்து ராமநாதபுரம் வரையுள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள எண்ணிக்கை எல்லாம் சேர்த்து 2000 விசைப்படகுகள் வரும். இந்த விசைப்படகுகள் அங்கு போவதால்தான் பிரச்சனை, தாக்குதல், பலி என்று வருகிறது.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக விசைப்படகுகளை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாக பாக் நீரிணையை விட்டு வெளியேறி, ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதற்கான படகுகளாக மாற்றலாம் என்று நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் அரசு முடிவெடுக்கிறது.

அந்தத் திட்டத்தில் என்ன நடைமுறைகள் உள்ளன? ஏன் தோல்வியுற்றது?

அதற்கு 80 லட்சம் மதிப்பிலான சூரை மீன் பிடிப்பதற்கான படகை வழங்குகிறது. அதை வைத்து இங்கே மீன் பிடிக்க முடியாது பாக் நீரிணையை விட்டு வெளியே போய்தான் பிடிக்க முடியும்.

தங்களுடைய பழைய விசைப்படகை ஒப்படைத்து விட்டு, இதை வாங்கிக்கொள்ள வேண்டும். மாற்று வாழ்வாதாரமாக இது கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பெரிய பெரிய போராட்டங்களைச் செய்த மீனவத் தலைவர்களுக்கு ஆளுக்கு ஒரு 80 லட்ச ரூபாய் படகை, லஞ்சம் கொடுப்பது போலக் கொடுத்துப் போராட்டத்தையும் திட்டத்தையும் அப்படியே இழுத்து மூடிவிட்டது. சமீபத்தில் பெரிய அளவிலான போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை.

ஆனால் சமீபத்தில் பாம்பனின் மீன் பிடித் துறைமுகம் கட்டப்பட்டதே?

அதற்குக் காரணம் இருக்கிறது. படகு வாங்கிய மீனவத் தலைவர்கள் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அந்தப் படகை இங்கு ஓட்ட முடியாது என்பதால், அவர்கள் வேறு ஊருக்குச் செல்ல வேண்டும். ஏனென்றால் இங்கு துறைமுகமோ, ஆழ்கடலோ இல்லை. அதனால், இராமேஸ்வரம் தீவிலேயே பாம்பனுக்கு அருகில் குந்துகாலில் ஒரு துறைமுகத்தை அமைத்துக்கொடுத்து, அங்கிருந்தே அவர்கள் ஆழ்கடல் போவதற்கான ஏற்பாட்டைச் செய்யச் சொல்கிறார்கள். அது கிடைக்கிறது. அதனால் மீனவத் தலைவர்கள் அடங்கிப்போய்விட்டார்கள்.

இந்தத் திட்டத்தில் மத்திய அரசு என்ன செய்யத் தவறியது?

2000 விசைப்படகையும் வெளியேற்றியிருக்க வேண்டும். இதைத்தான் அரசு முதலில் செய்திருக்க வேண்டும். அடுத்து இழு வலைகளைப் பாக் நீரிணையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்திருந்தால், இந்த மீனவப் பிரச்சனை ஒரு முடிவை நோக்கிப் போயிருக்கும்.

ஆண்டுக்கு 500 படகு வீதம், 4 ஆண்டுகளில் 2000 விசைப்படகுகள் மாற்றப்பட்டு, ஆழ்கடல் படகுகள் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை நாற்பது படகுகள்தான், அதுவும் மீனவச் சங்கத் தலைவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு, மொத்தத் திட்டத்தையே, மத்திய அரசு முடித்துவிட்டது. இது மத்திய அரசின் சதிதான்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் இந்தப் பிரச்சனைகளில் எப்படிச் செயல்படுகிறார்?

யாராவது இறந்து போனால் நிதி ஏற்பாடு செய்துகொடுப்பார். இறந்தவரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாங்கித் தருவார். மீனவச் சங்கத் தலைவர்களுக்கு ஆழ்கடல் படகு வாங்கித் தரும் வேலைகள் செய்வார். அவ்வளவுதான்.

இலங்கையின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்பதால் மீனவர்களுக்கு என்ன நன்மை?

மீட்கப்பட்டால் கூடுதலாக நான்கு கடல் மைல் மீன் பிடிக்கக் கிடைக்கும். அங்கே தங்குவதற்கான வசதிகள் கிடைக்கும். ஆனால், இந்தப் பிரச்சனை முடிந்து விடும் என்று சொல்ல முடியாது.

 

கச்சத்தீவு (நன்றி : neoiascap.com)

கடந்த 1974 ஆம் ஆண்டு, கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட போது, மீனவத் தொழில் சம்பந்தமாகப் போடப்பட்ட ஒப்பந்தம் என்ன ஆனது?

அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று இலங்கை சொல்கிறது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், தமிழக அரசும் அந்த வழக்கில் இணைந்துகொண்டது.

மேற்கு வங்கத்துக்கு அருகில் உள்ள பெருவாரி என்ற தீவை எடுத்துக்காட்டாகச் சொல்லி, நம் அரசு வாதிடுகிறது. அந்தத் தீவு முன்னமே வங்க தேசத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேற்கு வங்க அரசு அதை மீட்க உச்ச நீதிமன்றம் சென்று, இது எங்கள் மாநிலத்துக்குத்தான் சொந்தம் என்று வாதிட்டு, அதை மீட்டும் விட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் அதைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று வாதிடுகிறது.

ஆனால் மத்திய அரசோ, நாங்கள் ஒப்பந்தம் போட்டுக் கொடுத்துவிட்டோம். இனிப் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

தெரிந்தேதான் தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டுவதாகச் சொல்லப்படுகிறதே?

ஆமாம். தெரிந்தேதான் போவார்கள். இராமேஸ்வரத்தில் இருந்து நம் எல்லைக்குக் கிழக்குப் பக்கமாகப் போனால், சாதா படகிலேயே ஒன்றரை மணி நேரம்தான் ஆகும். நான்கு மணி நேரம் ஓடும் போது மீனவர்களுக்குத் தெரியாதா நாம் எல்லையைக் கடந்துவிட்டோம் என்று. எல்லையைத் தாண்டி, இலங்கைக்கு அருகில் வரை செல்கிறார்கள்.

முதலில் உண்மையைச் சொல்லிப் பழக வேண்டும். நாங்கள் கச்சத்தீவிற்குப் போக வில்லை. அவர்கள்தான் வந்தார்கள் என்று பொய் சொல்லக் கூடாது. அதனால் தீர்வே வராது.

ஏன் அப்படிச் சட்ட விரோதமாகக் கடல் எல்லையைத் தாண்ட வேண்டும்?

மீனவர்களுக்கு வேறு வழி இல்லை. தாக்குதல் நடந்தாலும் பரவாயில்லை. கிடைக்கும் வரை லாபம் என்றுதான் போகிறார்கள். சிலர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து விடுகிறவர்களும் உண்டு. அதே நேரம், போகவில்லை என்றால், வெறும் வயிற்றோடு வீட்டில் கிடைக்க வேண்டியதுதான்.

2017-ஆம் ஆண்டு இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொள்ளப்பட்ட 22 வயது மீனவர் (நன்றி : deccanherald.com )

தொடர்ந்து இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தைகள் ஏன் தோல்வியிலேயே முடிகிறது?

2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கையில் இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை நடந்தது. அதற்கு முன் இராமேஸ்வரத்திலும் சென்னையிலும் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருந்தது. இந்த மூன்றாவது பேச்சு வார்த்தையில், இலங்கை மீனவர்களால் ஒரு ஒப்பந்தம் வைக்கப்படுகிறது.

அதில் இலங்கைக் கடற்கரையில் இருந்து மூன்று கடல் மைல்களை மட்டும் எங்களுக்குக் கொடுங்கள், மற்றதில் நீங்கள் மீன் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அந்த மூன்று மைல்களில் சிறிய அளவிலான வலைகளுடனும் கூண்டு போட்டும் மீன் பிடித்துக்கொள்கிறோம்  என்றும் இலங்கை மீனவர்கள் சொன்னார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது, அந்த மூன்று கடல் மைலையும் நம்மாட்கள் விட்டு வைக்கவில்லை.

அடுத்து, வாரத்துக்கு மூன்று நாட்கள் நம் மீனவர்கள் கடலுக்குப் போவார்கள். மீன் பிடித் தடைக்காலம் எல்லாம் கழித்து 100 நாட்களுக்கு அருகில் வரும். அதை 75 நாட்களாகக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். நம் மீனவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அடுத்த நாளே நம் மீனவர்கள் அந்த மூன்று மைல் கடல் எல்லைக்குச் சென்று மீன் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த ஒப்பந்ததை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் இருநாட்டு மீனவர்களும் அதிகாரிகளும் அடங்கிய நடுவர் மன்றத்தை அமைத்தார்களா?

இல்லை. ஒரு நடுவர் நீதிமன்றத்தையும் அது இயங்குவதற்கான ஒரு சட்டவரைவையும் உருவாக்கி இருக்க வேண்டும். யார் யார் தவறு செய்கிறார், அவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் என்று அப்போது தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனால் இரு அரசுகளும் மீனவர்களை, நீங்களே  கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டு, பிரச்சனையை முடித்துக்கொள்ளுங்கள் என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டது.

நடந்த எல்லாப் பேச்சு வார்த்தைகளும் தோல்வி. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தைக்கே வர மறுக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் இலங்கை மீனவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், வட இலங்கைத் தமிழ் மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் தானே?

ஆமாம். தலைமன்னார், யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும்தான் சண்டையே. ஆனால் இதை எந்த தமிழ் மீடியாவும் சொல்லாது. சில தமிழ் மீடியா சிங்கள மீனவர்கள் என்று கூட சொல்கிறது.

இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்குக் கடலில் சண்டை வருமா?

நிறைய நடக்கும். ஆனால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் இந்தச் சண்டைக்கு வர கொஞ்சம் தயங்குவார்கள். நம்மாட்களிடம் இருப்பது ராட்சசப் படகுகள் என்பதால், பாதிப்பு அவர்களுக்கே நிறைய வரும் என்ற பயம்தான். அதேநேரம் அவர்கள் அங்கு சட்டரீதியாகப் போராடுவார்கள்.

இந்த இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனை, இலங்கைத் தமிழ் மாகாணங்களில் முக்கிய அரசியல் துருப்புச்சீட்டாக இயங்குகிறதா?

இதைத் தேர்தல் நேரத்தில் மன்னார் மாவட்டத்திற்குப் போனால் நீங்கள் பார்க்கலாம். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த டோலர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன்’ என்று பிரச்சாரம் செய்வார்கள். (டோலர் என்றால் இங்குள்ள விசைப்படகு) அங்கு வரும் எல்லா எம்.எல்.ஏ, எம்.பியும் இப்படிதான் ஓட்டு கேட்பார்கள். அதேபோல், அங்கு இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் சொல்லி, தமிழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் செய்வார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்களை பாக் நீரிணையில் இருந்து வெளியேற்றி, ஆழ்கடலுக்கு மாற்றுவது அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக நன்மை பயக்குமா?

ஆழ்கடலில் கிடைக்கும் சூர மீன் போன்றவற்றுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. அதனால் பொருளாதார ரீதியாக நல்ல லாபம் உண்டு. இங்கு ஆழ்கடல் போனவர்கள் நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

மேலும், இதற்குத் தனியாகப் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். இப்போது மீன் பிடிப்பது போல ரிஸ்க் இல்லை. இப்போது நடப்பது சூதாட்டம் போல. 70 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து கடலுக்குப் போகிறார்கள். கிடைத்தால் லாபம் இல்லை என்றால் சில நேரம் படகோடு மொத்தமாகப் போய்விடும்.

ஆனால் ஆழ்கடல் மீன் பிடிப்புமுறை நிம்மதியாக இருக்கும். சட்டவிரோதமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. நம் மீனவர்களும் அதை விரும்புகிறார்கள்.

ஆனால், ஆழ்கடல் படகு வாங்குவதில், பொருளாதார ரீதியாக மீனவர்களுக்குச் சில பிரச்சனை இருக்கிறதே?

இந்தத் திட்டத்தில் சில பிரச்சனை இருப்பது உண்மைதான். 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆழ்கடல் படகு வாங்குவதற்கு 50 சதவீதம் (40 லட்சம்) மத்திய அரசு மானியம் தருகிறது. 20 சதவீதம் (16 லட்சம்) மாநில அரசின் மானியம். 20 சதவீதம் (16 லட்சம்) வங்கிக் கடனாக வாங்கிக்கொள்ளலாம். பாக்கியுள்ள 10 சதவீதம் (8 லட்சம்) மீனவர்கள் கைக்காசைப் போட வேண்டும்.

வங்கி கடன் வழங்கி விடுகிறது. மீனவர்களும் கடன் வாங்கி அவர்களின் பங்கைக் கொடுத்து விடுகிறார்கள். மொத்தம் 24 லட்சத்திற்கு அவர்கள் வட்டி கட்ட வேண்டும். படகு கட்ட ஒரு ஆண்டு ஆகும்.

இன்னொன்று 8 லட்சம் கடன் வாங்க தகுதியுள்ள மீனவர்தான் இதில் இறங்க முடியும். அதனால், 56 லட்சம் மானியம் தரும் அரசு மீதத் தொகையையும் மானியமாகக் கொடுக்க வேண்டும்.

இந்த மீனவப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

இப்போதைக்கு முழுமையான தீர்வைச் சொல்ல முடியாது. முதலில் மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் செய்யும் துரோகத்தை நிறுத்த வேண்டும். முன்பு அறிவித்தபடி, ஆழ்கடல் மீன் பிடிப் படகுகளை அனைவருக்கும் வழங்க வேண்டும். அதுதான் இப்போதைக்கான தீர்வு. இல்லை என்றால், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்குதலுக்கும் உயிர்ப்பலிக்கும் ஆளாகத்தான் செய்வார்கள்.

நேர்காணல் – அரவிந்ராஜ் ரமேஷ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்