Aran Sei

IPS வருண்குமார் இடமாற்றம்: பாஜகவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்ததா தமிழக அரசு?

இராமநாதபுரம் மாவட்டம் வசந்தம் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 அன்று அருள் பிரகாஷ் (23) மற்றும் அவருடைய நண்பர் யோகேஸ்வரன் (20) இருவரையும் முன் விரோதம் காரணமாக 12 பேர் கொண்ட கும்பல் அரிவாள் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் அருள் பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு வழிலேயே உயிரிழந்தார். யோகேஸ்வரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து கேணிக்கரை போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரனையில், அருள் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் கடந்த திங்கட்கிழமை மதியம் வைநகரைச் சேர்ந்த சரவணன் நாகநாதபுரத்தைச் சேர்ந்த சபிக் ரகுமான் ஆகியோரை தாக்கியுள்ளனர் என்றும் இதற்கு பதிலடியாக சரவணன் மற்றும் சபிக் ரகுமான் தங்களுடைய நண்பர்களுடன் சென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த கொலை தொடர்பாக காமாட்சி, சுரேஷ், முகமது ரியாஸ் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி ஒரு பதிவிட்டிருந்தார். அதில் “இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட் (எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வமான ட்வீட்டர் பக்கத்தில் ”இராமநாதபுரம் கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய காரணத்திற்காக அருண்குமார் பயங்கரவாதிகளால் கொல்லப்படார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது” என்றும் தமிழக அரசு “எந்த பாரபட்சமும் இன்றி இந்த பங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பதிவிடப்பட்டது.

இந்த கொலைத் தொடர்பாக எச்.ராஜா மற்றும் தமிழக பாஜக வெளியிட்ட கருத்துகளை மறுக்கும்விதமாக, செப்டம்பர் 2ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டது. அதில் ”இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்”

அந்த செய்தி இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமார் பெயரில் வெளியிடப்பட்டது.

இந்த செய்தி வெளியான அடுத்தநாளே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

எஸ்.பி இடம் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹாரிருல்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ராமநாதபுரத்தில் இரு போதை பொருள் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் நடைபெற்ற படுகொலையை நேர்மையான முறையில் விசாரித்த மாவட்ட எஸ்பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா?”  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், அருண்குமார் கொலையை ராமநாதப்புரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரித்து நடுநிலையாக வந்ததாக குறிப்பிட்டுள்ளார். பாஜகவினர் இந்தக் கொலைக்கு மதச் சாயம் பூசி ராமநாதபுரத்தில் பதற்றம் ஏற்படுத்த முயன்றதாகவும், குறிப்பாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா முன்னெடுப்பில் பல பாஜகவினர் தொடங்கி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ வார இதழான ஆர்கனைசர் வரை இந்த கொலையை ஒரு வகுப்புவாத கொலையாகச் சித்திரிப்புச் செய்து சமூக வலைத்தளத்தில் வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ”தமிழக அரசு பாஜகவின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பது தமிழகத்தை ஆளுவது அதிமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜவாஹாரிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத்தில் நடைபெற்ற கொலையை மத கலவரமாக மாற்றும் விதத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளீட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

(இதுகுறித்து கருத்து கேட்பதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் வருண்குமார் ஐபிஎஸ்சை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். இந்த செய்தி பதிவேற்றம் செய்யும்வரை அவர்களிடமிருந்து பதில்கிடைக்கவில்லை)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்