Aran Sei

தமிழர்கள் தாக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கும் – வேல்முருகன்

தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் இந்திய இறையாண்மையைப் பாதிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன. தமிழகத்திலும் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர்களும் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள தமிழர்களும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கு வந்த கன்னட அமைப்பினர், தமிழர்கள் வைத்திருந்த பதாகைகளும், கருப்புக்கொடியையும் கிழித்து எறி ந்துள்ளனர் என்றும், தமிழில் பதாகைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், ”கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது கன்னட அமைப்பினர் மிரட்டல் விடுவதும், தாக்குதல் நடத்துவதும் புதியதல்ல. காலம் காலமாக தொடர்கதையாகவே அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கடந்த 2016ஆம் ஆண்டு, காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, கர்நாடக மாநிலமே போராட்டக் களமானது. தமிழர்கள் மீது கன்னடர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்களின் உணவகங்கள், உடைமைகள், தமிழ் பதிவுவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.” என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவான தமிழர்களின் போராட்டதில், தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவரை அரை நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கன்னட அமைப்பினர்களால் தாக்கப்பட்டனர் என்றும், கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

”தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில் ஈடுபடும் கன்னட அமைப்பினர் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசும், கர்நாடக அரசும் அலட்சியம் காட்டும் பட்சத்தில், அவ்விவகாரம் இந்திய இறையாண்மையைப் பாதிக்கும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்