Aran Sei

‘ராஜா… கடந்து வந்த பாதை..’

மிழ்நாட்டில் புகழ் பெற்ற ராஜாக்களுக்கு பஞ்சமே இல்லை. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், திருமலை நாயக்கர் தொடங்கி, நம் இளையராஜா வரை மக்கள் கொண்டாடாத ராஜாக்கள் இல்லை. அந்த எல்லா ராஜாக்களுக்கும் மேலாக, சமூக வளைதள இளசுகளால் கொண்டாடப்படுபவர் தான் பா.ஜ.க-வின்  தேசிய தலைவர்களில்  (முன்னாள் முன்னாள் முன்னாள் ) ஒருவரான ஹெச்.ராஜா.
இந்த முன்னாள் முன்னாளுக்கு பின்னால் உள்ள காரணம் தான் நேற்று நடந்தது.

முடிஞ்சா படிச்சுகோங்க

“மொத ஆண்ட்டி மோடி மைண்ட் செட்ட மாத்துங்கன்றேன் நானு..”

பாஜக-வின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜெ.பி.நட்டா நேற்று வெளியிட்டார். அந்தப்பட்டியலில் தேசிய அளவில் இணை செயலாளர்கள், துணைச் செயாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அதிஷ்டவசமாக.. சாரி ராஜா சார்.. ‘ஆ துரதிஷ்டவசமாக’ ராஜாவின் பெயர் அதில் இல்லை. ‘ஏன் இதுவரைக்கு ஒடச்சதெல்லாம் பத்தாதா.. பர்னீட்சர் மேல கை வச்ச..’ என்று மத்திய குழு யோகா செய்யும் போது நினைத்ததோ இல்லை ‘பூக்காத பூக்கடைக்கு பதிலாக புரோட்டா கடை போட்டாவாச்சு நாலு காசு வரும்’ என்று அதன் தமிழக பொருளாதார பானிபூரி மாஸ்டர்கள் நினைத்தர்களோ.. அது ‘வேலாயுதனுக்கே’ வெளிச்சம் (டிஸ்கி : ஒரு மாசம் கழிச்சு படிச்சா ராமனுக்கேனு படிங்க. செப்டம்பர் மாசம் மட்டும் விநாயகனுக்கேனு படிங்க).
ஆனால் இது சமூக வலைதள நெட்டிசன்களை (ராஜாவால் ஆண்ட்டி- இந்தியன் என்று பாஜமாக அழைக்கப்படுகிற) பெரும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

அப்படிப்பட்ட ராஜாவிடம் இருந்து தப்பித்து கடந்து வந்த அவரின் பாதையை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

“..யூ ஆர் ஆண்டி இந்தியன்.. ஐ அம் நாட் சப்போஸ்ட் டூ ஆன்சர் திஸ் கொஸ்டின்..”

‘நெல்லாடிய நிலம்’ என்று செல்வராகவன் ரசிகர்களால் அழைக்கப்படும் தஞ்சை மண் தான் ஹெச்.ராஜாவிற்கு பிறந்த மாவட்டம். காரைக்குடியில் பள்ளிப்படிப்பையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தவர். பின் சட்டம் படித்தார். அதன் சந்து பொந்து மட்டுமல்லாது, அதன் லாங் ஹேர், ஷார்ட் ஹேர், க்ராப், சம்மர் கட் என அதன் எல்லா ஹேர்களையும் ஒவ்வொன்றாக புடுங்கி எடுத்து, ஹைக்கோர்ட்டாவது ‘ஹைக்கோர்ட்டாவது’ என்று ராஜபாட்டை போட்டவர் ராஜா.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வில் (ஆர்எஸ்.எஸ் என்ற பா.ஜ.க) உறுப்பினராக இருந்தார். பின் 99-ல் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2001-ல் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பின் சென்னை டூ சிவகங்கை பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் போல மாற்றி மாற்றி சென்னை தொகுதிகளிலும் சிவகங்கை தொகுதியிலும் ட்ரிப் அடித்து போட்டியிட்டு கொண்டிருந்தார்.

சாரணிய இயக்க தேர்தலில் 52 வாக்குகள் பெற்று வெற்றியை விட்டுக்கொடுத்து  வந்தார் என்பது ஒரு வாய் பேசாத வரலாறு.

சினிமா போன்ற நிகழ் கலைகள் மீது ராஜாவிற்கு எப்போதுமே தனி கவனம் உண்டு. தளபதி விஜயின் தீவிர ரசிகரான இவர், அவரை ஜோசப் விஜய் என்றே அன்போடு அழைப்பார். விஜயின் ஆதார் கார்ட்டை வெளியிட்டு, விஜய் மீதான பாசத்தில், அவரின் நெஞ்சில் குடியிருக்கும் உயிர் ரசிகர்களையே கண் கலங்க வைத்தார். ‘ஆ..வூனு தியேட்டர்ல கத்துறவன் எல்லாம் உயிர் ரசிகன் இல்லடா ஆதார் கார்ட்டையே நெஞ்சுக்குள் வச்சுருக்கவன் தாண்டா உண்மையான தளபதி ரசிகன்’ என்று சொல்லில் சொல்லாமல் சொல்லிச்சென்றார்.

“.. ஹைக்கோர்ட்டாவது…”

மேலும் மெர்சல் பட வெளியீட்டின் போது படத்தின் விளம்பர வேலைகளை தானே முன்னின்று ஏற்று செய்ததை பார்த்து, அயோத்தியில் இருந்து அம்பாசமுத்திரம் வரையுள்ள ஒவ்வொரு விஜய் ரசிகனும் கண்கலங்கித்தான் போனான். ‘ராஜாவின் சக விஜய் ரசிகன் எழுதும் கடிதம்’ என்று பிரபல வார இதழ் ஒன்றுக்கு கடிதங்கள் குவிந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது அதை பற்றி விஜய் ரசிகர்களிடம் பேசினாலும் சிலிர்த்து போய், கண்கலங்கி போவார்கள். (..ப்ரோ.. அந்த கர்ச்சீப்ப எடுங்க ப்ளீஸ்)

இப்படி (கட்சியை தவிர) ஊருக்காக உழைத்து உழைத்து உழைத்து உழைத்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் ராஜா.  ’ராஜா வா தலைமை தாங்க வா’ என்று காரைக்குடி பக்கம் தொண்டரகள் கரகாட்டம் எடுக்க விருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் இருக்கிறது.

ஆனால் இந்த பிரச்சனைகள் எதையுமே தலையில் ஏற்றிக்கொள்ளாது, “பதவிங்குறது நம்மள தேடி வரணும். நாம தேடிப்போக கூடாது” என்ற பிரபல நடிகரும் ’சிறிது நேரத்தில்’ அரசியல் கட்சி தொடங்க இருப்பவருமான அவர் நண்பரின் பஞ்ச் டயலாக்கை மறைமுகமாக சொல்கிறாரா? தொடர்ந்து விவாதிப்போம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்