Aran Sei

உரிமைக்காக உயிர்நீத்த விவசாயிகள் – மலர் தூவி அஞ்சலி செலுத்திய போரட்ட குழு

திருச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. டெல்லி எல்லையில் விவசாயிகள் 25 நாட்களை கடந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டெல்லி எல்லையில், கடும் குளிரிலும் மழையிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரையிலும் 33 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 20) திருச்சியில் மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களை வைத்து மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்க முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதை தொடர்ந்து பேசிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், விவசாயிகளின் போராட்டத்தை அரசு முடக்க நினைத்தாலும், இந்தச் சட்டங்களை திரும்பப் பெறும்வரையிலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் தொடர்ந்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தேவைப்பட்டால் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக பிரிவினர் டெல்லிக்கு சென்று போராட்டத்தில் இணைந்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் இழந்துள்ள 33 விவசாயிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக இன்று (டிசம்பர் 20) ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்