Aran Sei

கோயில் சொத்துகள் யாருக்கு? – இந்து அறநிலையத் துறையின் வரலாறு

“இந்துசமய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களைக் கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது” என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம்

இந்து அறநிலையத் துறையின் வரலாற்றையும் அது ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தையும் இந்தக் கோயில்களின் சொத்துகளைக் கையாள்வது பற்றிய போராட்டங்களையும் பற்றிப் பத்திரிகையாளர் பாரதி தம்பி 2018-ல் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.

ந்து சமய அறநிலையத் துறை தொடர்பான சர்ச்சை இப்போது மீண்டும் செய்திகளில் முன்னிலை பிடித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ‘தமிழகக் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்’ என பா.ஜ.கவின் சில தலைவர்கள், அனுதாபிகள் கோரி வருகின்றனர். உண்மையில் இது பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட கால கோரிக்கை. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, இந்தக் கோரிக்கையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உருவான வரலாறு என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமானது. அது கருணாநிதி காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டமோ, தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கொண்டுவரப்பட்ட சட்டமோ அல்ல. தமிழகக் கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்ட வரலாறு கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டம் 22/1959 என அழைக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களை மட்டுமல்ல… சமணக் கோயில்கள் மற்றும் சமயம் சார்ந்த அற நிலையங்களை நிர்வகிப்பதற்கான சட்ட அதிகாரத்தைத் தருகிறது.

இந்து சமயக் கோயில்களுக்கு ஆரம்பம் முதலே பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. இவற்றை நிர்வாகம் செய்வதில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும், ஊழல்கள் மிகுந்து காணப்படுவதாகவும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே புகார்கள் வரத் தொடங்கின. அப்போது ஆட்சி செய்த மன்னர்களிடமும், கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடமும் இது தொடர்பாகப் பொதுமக்கள் ஏராளமான புகார்களைக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் 1817-ல் முதல்முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டமானது திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான அறக்கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்கான பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது. இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தொடங்கி 1849-ம் ஆண்டுக்குள் 21 ஜில்லாக்களில் இருந்த 8,292 கோயில்கள் சர்க்காரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஊழல் புரிந்த தர்மகர்த்தாக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மூடிக்கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்டன.

1858-ல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டீஷ் மகாராணியிடம் நேரடியாகச் சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை அப்போதைய பிரிட்டீஷ் மஹாராணிக்கு இருந்தது. இதனால், அவரது நிர்வாகம், ‘மத விவகாரங்களில் பிரிட்டீஷ் அரசு தலையிடாது’ என்ற வாக்குறுதியை அளித்தது. இதனால் ஏற்கெனவே கோயில்களும் அவற்றின் சொத்துகளும் யார் வசம் இருந்தனவோ, அவர்கள் தங்கு தடையின்றி அவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.

புகார்கள் பெரிய அளவில் வந்தாலும் கூட, சிக்கல் நிறைந்ததும் புரிந்துகொள்ள சிரமமானதுமான இந்திய சாதி அமைப்பையும் அதனுடன் பின்னிப் பிணைந்திருந்த கோயில் விவகாரங்களையும் பிரிட்டிஷ் அரசு விலகி நின்றே அணுகியது. உள்ளே தலையிடவில்லை. அதேநேரம், கோயில்களின் உள்ளே இருக்கும் விலை மதிப்பு மிக்க தங்க நகைகள், விக்கிரகங்கள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், சொத்துகளில் ஊழல் மலிந்து விட்டதாகவும் பொதுமக்கள் புகார் கொடுப்பது மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

குறிப்பாக, தர்மகர்த்தா உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் கோயில் நிலங்களை நிர்வகிப்பதன் வழியே கிடைக்கும் வருவாயை அரசு கஜானாவுக்குக் கொண்டு சேர்க்காமல் முறைகேடு செய்தனர். இதன்மூலம் கோயில் நிலங்கள் ஏலத்துக்கு வந்தன. அப்படி ஏலத்துக்கு வரும்போது குறைந்த விலைக்கு அவர்களே வேறு நபர்கள் மூலம் வாங்கிக்கொண்டார்கள்.

‘விசாகபட்டிணம் முதல் திருநெல்வேலி வரை இப்படி அப்பட்டமாக முறைகேடு செய்து கோயில் சொத்துகளைக் கொள்ளையடித்த 65 வழக்கு விவரங்களை நான் தொகுத்து வைத்திருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் படித்துக்கொள்ளலாம்’ என்கிறார் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார்.

இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு முக்கியமான சீர்திருத்தங்கள் நடைபெற்றன. ஒன்று 1919-ல் நடைபெற்ற மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம். இரண்டாவது, தென்னிந்திய நல உரிமை சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதாரின் அமைப்பு, நீதிக்கட்சியாக உருவெடுத்த நிகழ்வு. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தத்தின் விளைவாக இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில் 1920-ல் நடைபெற்ற மதறாஸ் மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்றது. பனகல் அரசர் ராமராய நிங்கர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துத் திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்தார். இதற்காக 1922-ல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தும், உயர் சாதி அமைப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றை எதிர்கொண்டு சமாளித்து 1925-ல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அவற்றை ஏற்க மறுத்து பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த மசோதா மீது 800 திருத்தங்களை சட்டமன்றத்தில் கொண்டுவந்தனர். அந்த 800 திருத்தங்களில் 500 திருத்தங்களைக் கொண்டுவந்தவர், அன்றைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சத்தியமூர்த்தி அய்யர்.

அந்த எதிர்ப்புகளையும் மீறி இந்து பரிபாலன சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பனகல் அரசர் முனைப்புடன் இருந்தார். இறுதிக்கோரிக்கையாக, ‘திருப்பதி கோயிலை மட்டுமேனும் விட்டுவிட வேண்டும்’ என்ற கோரிக்கை அழுத்தமாக எழுப்பப்பட்டது. அதையும் பனகல் அரசர் நிராகரித்தார்.

‘மதத்தில் அரசு தலையிடுவதாக’ குற்றம் சாட்டிய சத்தியமூர்த்தி அய்யர், ’’ஆண்டவனை சட்டம் போட்டுக் கட்டுப்படுத்துவதா?’’ என ஆவேசமாகக் கேட்டார். சத்தியமூர்த்தியின் நிலைபாட்டை ஆதரித்து அறநிலையைத்துறை சட்டத்தை எதிர்த்த சுதேசமித்திரன், இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் சட்டத்தைக் கண்டித்துக் கடுமையாக தலையங்கம் எழுதின.

எனினும் முதலமைச்சர் பனகல் அரசர், அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்தச் சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927-ல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்படி திருக்கோயில்களின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதைப்போலவே நிர்வாகம் சரிவர நடைபெறாத கோயிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது.

இதை அடுத்து 1947 முதல் 49 வரையிலான இரண்டு ஆண்டுக்காலம் ஓமாந்தூர் ராமசாமி, சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழகக் கோயில்களில் நடந்த எண்ணற்ற ஊழல்கள், முறைகேடுகளை எதிர்த்துப் பல நடவடிக்கைகளை அவர் எடுத்தார். வைணவ நெறிகளைப் பின்பற்றிய முழு ஆத்திகவாதியான ஓமாந்தூரார், கோயில்களும் மடங்களும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டதால்தான் நாட்டில் நாத்திகம் வளர்கிறது என்று நினைத்தார். இதனால், அறநிலையத் துறை சட்டங்களில் மேலும் பல திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

கோயில் சொத்துகளைக் குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திய ஓமாந்தூரார், மடங்களில் உள்ள நகைகள், பதிவேட்டில் பதிப்பிக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார். இந்து சமய மற்றும் தர்ம ஸ்தாபன பரிபாலன வாரியம் என்ற பெயரில் இருந்த அமைப்பை மாற்றி, அதை ஓர் அரசாங்கத் துறையாக கொண்டுவந்தார். இந்து கோயில்கள் மட்டுமன்றி, சமணர்களுடைய கோயில்களையும் அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தவர் ஓமாந்தூரார்தான். அப்போதும், ‘மத விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது’ எனக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதை ஏற்றுகொள்ளாத ஓமாந்தூரார், ‘’தேவதாசி ஒழிப்பு மசோதா, ஹரிஜன ஆலய பிரவேச மசோதா போன்றவை கொண்டு வரப்பட்டபோதும் இதையேதான் சொன்னார்கள். இந்த எதிர்ப்புக் கூச்சல்களை ஏற்க முடியாது. மதத்தின் பெயரால் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப்பவர்கள், தங்கள் மதத்துக்கே தீமை செய்பவர்கள்” எனக் கடுமையாகச் சாடினார்.

எனினும் ஓமாந்தூராரின் ஆட்சி இரண்டு ஆண்டுகளே நீடித்தன. பிறகு, 1951-ல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி கீழிருந்து மேலாக அதிகார மட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்படவும், தலைமை அதிகாரியாக ஆணையர் ஒருவரை நியமிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. அதிகாரிகளின் நிர்வாக எல்லைகளும் வரையறுக்கப்பட்டன.

பிறகு, 1954-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர், இந்து சமய அறநிலையத் துறையில் மேலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். முக்கியமாகப் போக்குவரத்து, அரிஜனர் நலம், இந்து அறநிலையத் துறைகளுக்கான அமைச்சராகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை நியமித்தார். இவர் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னோடித் தலைவரான இரட்டைமலை சீனிவாசனின் பேரன் ஆவார்.

1959-ல், காமராஜர் ஆட்சிக்காலத்தில் அறநிலையத் துறையின் முந்தைய சட்டங்களின் பெரும்பான்மையான குறைகள் கலையப்பட்டுத் தற்போதுள்ள சட்டமான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது.

இதே காலகட்டத்தில்தான் அரசு துறைகளின் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, இந்து சமய அறநிலையத் துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர். இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக வர முடியும் என்ற நிலையும், ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன்மூலம் நிலைநாட்டப்பட்டது.

ஆனால், திருக்கோயில்கள் என்பவை வெறுமனே வழிபாட்டு இடங்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. அரசுத் துறை என்ற அளவில் பார்த்தால், வருவாய்த் துறைக்கு அடுத்து அதிக நில சொத்துகள் கொண்ட அரசுத்துறை இந்து சமய அறநிலையத் துறைதான்.

ஆனால் இவற்றைக் காலம் காலமாக அனுபவித்து வந்தவர்கள் அவற்றை ஆக்கிரமித்து வைத்திருந்ததால், படிப்படியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏராளமான அரசு நிலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு 2011 முதல் 2015 வரையிலான நான்கு ஆண்டுக் காலத்தில் மட்டும் 1,683 ஏக்கர் பரப்பளவுள்ள சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஏராளமான திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இட ஒதுக்கீடு மூலம் இந்து சமய அறநிலையத் துறையில் பணியில் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினப் பெண்களும் ஆண்களுமே இவற்றை செய்தனர்.

தற்போதைய நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38,618 கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளும், 17 சமண சமயத் திருக்கோயில்களும் இருக்கின்றன. இத்தனை ஆயிரம் கோயில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பைத் தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோயிலை நிர்வகிக்கும் அந்தந்த கோயில்களின் ஊழியர்கள் தனி.

இந்து சமய அறநிலையத்துறை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் திருக்கோயில்களை, திருமடங்களை, அறநிலையங்களை நிர்வகிக்கும் ஒரு துறை. இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கோட்பாட்டின்படி இத்துறையின் செலவினங்களை அரசின் பொதுக் கருவூலத்திலிருந்து மேற்கொள்ள இயலாது. இதனால், இந்து சமய அறநிலையத் துறையின் ஊழியர் சம்பளம் உள்ளிட்ட அனைத்துச் செலவீனங்களும், திருக்கோயில்களில் ஈட்டப்படும் வருவாயிலிருந்தே நிர்வகிக்கப்படுகிறது.

அதாவது ஒரு கோயில் ஈட்டும் மொத்த வருவாயில், வரிக்கு உட்பட்ட வருமானத்தில் இருந்து 14 சதவிகிதம், அரசுக்கு வரியாகச் செலுத்தப்படுகிறது. இந்தத் தொகையில் இருந்துதான் அறநிலையத் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது அரசு. அதாவது அரசு கருவூலத்தில் இருந்துதான் அவர்களுக்கு ஊதியம் செல்கிறது என்றாலும், அது அடிப்படையில் கோயில் வருவாயில் இருந்து வருவதுதான்.

அதேநேரம், கோயிலின் வரிக்கு உட்பட்ட வருமானமான 14 சதவிகிதத்தைத் தவிர, மற்ற கோயில் வருவாய் எதையும் அரசு எடுத்துக்கொள்வது இல்லை. அவை அனைத்தும் அந்தத்த திருக்கோயில்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கே செலவிடப்படுகின்றன. வருமானம் அதிகமாக ஈட்டும் கோயில்களில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, வருமானம் இல்லாத கோயில்களின் பராமரிப்புப் பணிகளுக்குச் செலவிடுவதும் நடைபெறுகிறது. மொத்தத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை என்பது மிகவும் திட்டமிட்ட வகையில் அதன் வரவு, செலவுகளைக் கையாள்கிறது.

திருக்கோயில்களின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வங்கிக்கணக்குகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன. கோயில் வருவாய் அனைத்தும் கண்காணிப்புக்கும் தணிக்கைக்கும் உட்பட்டது. வருவாய் இல்லாத கோயில்களில் ‘ஒருகால பூஜைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. குக்கிராமக் கோயில்களுக்கான கிராமப்புறக் கோயில்கள் திருப்பணித் திட்டம், ஆதி திராவிடர் பகுதி திருக்கோயில்கள் திருப்பணி திட்டம் எனப் பலவகை திட்டங்களை அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது.

எனினும் பாரம்பரியமான; புராதனமான கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுகின்றன என்ற புகார் அறநிலையத் துறை மீது தொடர்ந்து எழுப்பப்படுகின்றது. ‘எங்கோ கிராமங்களில் ஏதோ ஒரு கீழ்மட்ட ஊழியர் செய்யும் ஒரு சில விஷயங்களைப் பொதுமைப்படுத்துகின்றனர்’ என்று அறநிலையத் துறை இதற்கு விளக்கம் சொல்கிறது.

இதன் மொத்த விளைவாக, ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொல்லியல் துறையின் கட்டுப்பாடு அதிகரித்துவிட்டதாலும், கோயில் புனரமைப்பு, குடமுழுக்கு உள்ளிட்ட பல பணிகள் தடைபட்டு நிற்பதாகச் சொல்கிறது இந்து சமய அறநிலையத் துறை. ஆண்டு ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் வரையிலும் நடைபெற்று வந்த கோயில் திருப்பணிகள், வழக்குகள் காரணமாக இப்போது ஆண்டுக்கு 79 கோடி என்ற அளவில் சுருங்கிவிட்டதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

அறநிலையத் துறையின் பணிகள் என்பவை, ஸ்தபதிகள், சிற்பக்கலைஞர்கள், ஓவியர்கள், கட்டட கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்களுடன் நேரடியாகத் தொடர்புடையது. அவர்களும் வேலைவாய்ப்பு குறைந்து தடுமாறுகின்றனர் என்றும், பொதுமக்களின் பார்வையில் இந்து சமய அறநிலையத் துறை சுணங்கி நிற்பதைப் போன்ற தோற்றம் உருவாக இவை காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தமிழகம் முழுக்க உள்ள அனைத்துப் பெரிய கோயில்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டும் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் சர்ச்சைக்குரியதாக தொடர்ந்து வருகிறது.

1885-ம் ஆண்டிலேயே சிதம்பரம் கோயில் தொடர்பாக வழக்கு நடந்துள்ளது. 1951-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ‘சிதம்பரம் கோயில் தனிச்சொத்து அல்ல. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ எனத் தீட்சிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்போது முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா, சிதம்பரம் கோயிலைச் சட்ட வரம்புக்குள் கொண்டுவர ஆணைப் பிறப்பித்தார். ஆனால், அந்த ஆணைக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற தீட்சிதர் தரப்பு தொடர்ந்து கோயிலை தங்கள் வசமே வைத்திருந்தது.

பிறகு, 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக்கொண்டு செயல் அலுவலரை நியமித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர் தீட்சிதர்கள். பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், பல்வேறு மேல்முறையீடுகளூக்குப் பிறகு, 2009-ம் ஆண்டு, ‘சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக்கொண்டது செல்லும்’ எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி பானுமதி. அரசு, கோயில் நிர்வாகத்தை ஏற்று நடத்த ஒரு வார காலம் அவகாசமும் தந்தார். ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தீர்ப்பு வந்த அன்று மாலையே சிதம்பரம் கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இதன்மீதும் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு நடைபெற்றது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிதம்பரம் கோயில் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. ’வழக்கில் வாதாட வேண்டிய தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ஏன் பின்னால் அமர்ந்திருக்கிறீர்கள்?’ என உச்சநீதிமன்ற நீதிபதிகளே கேட்டனர்.

இதைத் தொடர்ந்து, ‘சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக்கொண்டது செல்லாது. உடனே தீட்சிதர்கள் வசம் கோயிலை ஒப்படைக்க வேண்டும்’ என 2014-ல் தீர்ப்பளித்தது நீதிமன்றம். இப்போதுவரை சிதம்பரம் கோயில் மட்டும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இல்லாமல், தில்லை தீட்சிதர்கள் வசமே இருந்து வருகிறது.

தமிழக இந்து சமய அறநிலையச் சட்டம் என்பது ஒருவகையில் இந்தியாவுக்கே முன்னோடியானது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியில் நிர்வாகத்தில் தொடங்கி கருணாநிதி காலம் வரையிலும் இது படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. வட இந்தியாவில் பிரமாண்ட கோயில்கள் குறைவு. ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான பிரமாண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சொத்துகளும் இருக்கின்றன. இவற்றை கையாள்வதற்குதான் இந்து சமய அறநிலையத் துறையே உருவாக்கப்பட்டது.

வட இந்தியாவில் உள்ள மந்திர் என்று சொல்லப்படும் கோயில்கள் இன்றளவும் தனியார் நிர்வாகத்திடம்தான் உள்ளன. ஆந்திராவில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான், தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. இன்னும் பல வட மாநிலங்களில் இத்தகைய சட்டமே இல்லை.

எனவே, தமிழகக் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் இருப்பது, கோயில்களை மறுபடியும் முன்புபோல பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோருவதுதான். அதைத் தவிர இதற்கு வேறு நோக்கங்கள் எதுவும் இல்லை.

நன்றி – nadaivandi.blogspot.com

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்