Aran Sei

இந்தி தெரிந்தால்தான் லோன் – வங்கி மேலாளர் பணியிட மாற்றம்

ரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், வணிக வளாகம் கட்ட கடன் கேட்டு வந்தவருக்கு இந்தி தெரியாததால் கடன் வழங்க முடியாது எனக்கூறிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார் பாலசுப்ரமணியன். அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ஜெயங்கொண்டத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து, கடன் வாங்குவதற்காக போதிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு தான் கணக்கு வைத்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கங்கை கொண்ட சோழபுரம் கிளைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அக்கிளையின் மேலாளர் விஷால் நாராயண் காம்ளே, தன்னிடம் இந்தி தெரியுமா எனக்கேட்டதாகவும், தனக்கு இந்தி தெரியாது எனக்கூறியதால் கடன் வழங்க முடியாது என மறுத்ததாகவும் கூறி பாலசுப்ரமணியன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் விளைவாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

“ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே எனக்கு சொந்தமாக இடம் இருக்கிறது. அங்கு வணிக வளாகம் கட்டலாம் என முடிவு செய்தேன். என் சொந்த ஊரான கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கு வைத்திருக்கிறேன். எனவே, தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றேன்.

அங்கு மேலாளராக இருந்த விஷால் நாராயண் காம்ளே, என்னிடம் இந்தி தெரியுமா? என ஆங்கிலத்தில் கேட்டார். நான், எனக்கு இந்தி தெரியாது தமிழும், ஆங்கிலமும்தான் தெரியும் என ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அதற்கு அவர் “நான் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்தவன்… எனக்கு இந்திதான் நன்றாகத் தெரியும்” எனக்கூறி எனது கடன் மனுவை நிராகரித்து விட்டார். எனது ஆவணங்களை அவர் பார்க்கக்கூட இல்லை” என்று அரண் செய்யிடம் கூறினார் பாலசுப்ரமணியன்.

“நான் அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவன். ஆங்கிலம் தெரிந்தும் கூட, இந்தி தெரியாது என்பதைக் காரணமாகக் கூறி எனது கடனுக்கான கோரிக்கை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கூட அறியாத எண்ணற்ற மக்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களது நிலை என்ன? ஒரு காலத்தில் சோழப் பேரரசுக்கே தலைநகராக விளங்கிய ஊர் கங்கை கொண்ட சோழபுரம். தமிழ் பாரம்பரியம்மிக்க, ஒரு கிராமத்தில் இந்தி தெரியாது என்கிற காரணத்துக்காக எனது கடன் மனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவேதான் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தேன்”

இதனைத் தொடர்ந்து அக்கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளே திருச்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து விளக்கம் கேட்பதற்காக அரண் செய் சார்பாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தி தெரியாது என்கிற காரணத்துக்காக ஒருவருக்கு வங்கிக் கடன் மறுக்கப்பட்டிருப்பது அரசியல் தளத்திலும் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்தி மொழிவெறி எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்திருக்கு வட இந்தியருக்கு இவ்வளவு ஆணவம் கூடாதெனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி…

Posted by M. K. Stalin on Monday, September 21, 2020

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்