Aran Sei

`நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா’ – ரஜினிக்கு நீதிபதி கண்டனம்

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குக் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி செப்டம்பர் 10-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பேரிடர் காலத்தில் இந்தத் தொகையைப் பாதியாக நிர்ணயிக்க விதிகள் உள்ளதால், அது தொடர்பாக வரித் தொகையை குறைத்து முடிவெடுக்கும்படி செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியிருந்தார் ரஜினிகாந்த். அந்தக் கடிதத்தின் மீது உரிய முடிவெடுக்கக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடைசியாக கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாகச் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும், மார்ச் 24-ம் தேதி பிறகு அனைத்துத் திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாகப் பெற்ற தொகையைத் திருப்பி வழங்கியுள்ளதாகவும் அந்த மனுவில் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்துவரியைச் செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியைத் திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால் அதன்படி வரியை நிர்ணயிக்கக் கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சொத்து வரி மீது அபராதம் மற்றும் வட்டியை வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, “செப்டம்பர் 23-ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29-ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா” எனக் கேள்வி எழுப்பினார்.

மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் எனவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா எனக் கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா எனவும், நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா என்றும் கேள்வி எழுப்பினார்.

கடுமையான அபராதம் விதித்து இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன் பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்துள்ளார்.

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில்,  லதா ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான பள்ளி செயல்பட்டுவருகிறது. பள்ளி இயங்கிவரும் கட்டடத்தின் வாடகை பாக்கி சுமார்  பல கோடி ரூபாய் உள்ளது என்று 2017 -ம் ஆண்டு அதன் உரிமையாளர், அந்தப் பள்ளி மாணவர்களை வெளியேற்றிவிட்டு பள்ளியை இழுத்து மூடிவிட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து `வாடகை தராததால் பள்ளி இழுத்து மூடப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. மக்கள் நம்ப வேண்டாம்’ என்று பள்ளி நிர்வாகம் அப்போது விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்