Aran Sei

`இந்தியா எதிர்கொள்ளும் சவாலே மோடியின் ஆட்சிதான்’ – ஜோதிமணி

Image Credits: New Indian Express

“பரம்பரை ஊழல் என்பது நாட்டுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக உள்ளது” என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது பல மாநிலங்களில் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஊழல் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்கிறது என்றும் அது நாட்டை ஒரு கரையானைப் போல அரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

சிபிஐ ஏற்பாடு செய்த இணையவழி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கவுள்ளது.

அதில் உரையாற்றிய மோடி, “இன்று, நான் உங்களுக்கு முன் மற்றொரு பெரிய சவாலைப் பற்றிக் குறிப்பிடப்போகிறேன். கடந்த தசாப்தங்களில் நம் நாட்டில் படிப்படியாக வளர்ந்த இந்தச் சவால் இப்போது மேலும் வலுவடைந்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

“இது பரம்பரை ஊழலால் ஏற்படும் சாவல், அதாவது அடுத்தடுத்த தலைமுறைகளால் முன்னெடுக்கப்படும் ஊழலால் ஏற்படும் சாவல்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த தசாப்தங்களில் ஊழலில் ஈடுபட்ட ஒரு தலைமுறை தண்டனையிலிருந்து தப்பிக்கும்போது, ​​அடுத்த தலைமுறை இது போன்ற செயல்களைச் செய்வதில் அதிக வெட்கத்துடன் ஈடுபடுவதைக் காணமுடிகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

“வீட்டில், பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்ட ஒருவருக்குத் தண்டனை  வழங்கப்படவில்லை எனில், அதைக் காணும் இன்னொருவர் ஊழலில் ஈடுபடுவதற்கான நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது,” என்று பிரதமர் மோடி தனது இந்தி உரையில் தெரிவித்துள்ளார்.

“முறையான சோதனைகள், பயனுள்ள தணிக்கை, திறன் மேம்பாடு மற்றும் ஊழலுக்கு எதிரான பயிற்சி ஆகியவை தேவை,” என்று பிரதமர் கூறியுள்ளார்.

“ஊழலை எதிர்த்துப் போராடுவது என்பது ஒரு நிறுவனத்தின் வேலை அல்ல; அது ஒரு கூட்டுப் பொறுப்பு” என்று  இந்த விழிப்புணர்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான தேசிய மாநாட்டைத் தொடங்கிய பின்னர் பிரதமர் மோடி கூறினார்.

இது குறித்து ‘அரண்செய்யுடன்’ பேசிய கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, “இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நேரத்தில் சீனாவுக்குப் பயந்துகொண்டு இருப்பதுதான் இந்த நாடு எதிர்கொள்ளும் சவால். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சீனாவின் ஊடுருவல் நடைபெறவில்லை. பொருளாதாரம் இந்த அளவுக்கு மோசமாகவில்லை. வேலைவாய்ப்பு கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் குறையவில்லை,” என்று கூறினார்.

“காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை யாரும் ஆதரிக்கவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவவில்லை. இவை அனைத்தும்தான் இன்று இருக்கக்கூடிய பிரச்சனைகள். இதற்கு மோடியும் பாஜகவும் தான் காரணம். இதை மறைக்கத்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்,” என்று தெரிவித்தார்.

“ஒரு பிரதமர் என்ன சொல்ல வேண்டும்? ஆறு ஆண்டுக்காலமாக நான் இத்தகைய பணிகளைச் செய்துள்ளேன் என்றுதான் கூற வேண்டும். அவற்றைத் தெரிவித்துதான் வாக்குச் சேகரிக்க வேண்டும். புலம்பெயர்த் தொழிலாளர்கள் நடந்து செல்வதை இரக்கம் இல்லாமல் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தொற்றுக்காலத்தில் எந்தக் காங்கிரஸ் பரம்பரையைச் சேர்ந்த நபரும் மயிலுக்குத் தீனிபோட்டுக்கொண்டு இருக்கவில்லை. அவர்கள் பிரதமரின் பணியை மேற்கொண்டார்கள்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜோதி மணி “பணம் படைத்த வம்சாவளியிலிருந்து வந்த காங்கிரஸ் குடும்பத்தினர் ஒருபோதும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள உடையை உடுத்தியதில்லை. நேர்மைக்கும், சேவைக்கும், தியாகத்திற்கும் அவர்கள் இலக்கணமாக இருந்தார்கள். இதற்கெல்லாம் நேர் எதிராக ஊழலாக, ஆடம்பரமாக, சர்வாதிகாரமாக, அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்த ஒரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் மோடி அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கான தகுதி இல்லை,” என்று விமர்சித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்டமைத்த நாட்டைச் சின்னாபின்னம் ஆக்கியதுதான் மோடி அரசின் ஒரே சாதனை. தேநீர் விடுதியில் வேலை செய்ததாகக் கூறும் பிரதமர் ரூ.8,500 கோடிக்கு விமானம் வாங்கியுள்ளார். ஆனால், மூன்று பிரதமர்கள் இருந்த குடும்பம் ஏர் இந்திய விமானத்தைத்தான் பயன்படுத்தியது,” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்